உத்தராகண்ட் மாநிலத்தில் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தராகண்ட் சென்றார். அங்கு முக்வாவில் உள்ள கங்காதேவியின் கோயிலில் அவர் பூஜை, வழிபாடுகளை நடத்தினார். மலையேற்றம் மற்றும் இரு சக்கர வாகன பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஹர்சிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: உத்தராகண்ட் மாநிலத்துக்கு மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். குளிர்காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் குறைவாக இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். ஆண்டு முழுவதும் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை தர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக குளிர்காலத்தில் மலையேற்றம், பனிச்சறுக்கு உள்ளிட்ட சாகச சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும். உத்தராகண்ட் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும்.
உத்தராகண்ட் வளர்ச்சியில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. கேதார்நாத், ஹேமகுண்டம் புனித தலங்களுக்கான ரூ.6,000 கோடி மதிப்பிலான ரோப் கார் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் இரு புனிதத் தலங்களுக்கான 9 மணி நேர பயணம், 30 நிமிடங்களாக குறையும். ரோப் கார் கேபிள் அமைக்கப்பட்ட பிறகு முதியோர், பெண்கள், குழந்தைகள் கேதார்நாத்துக்கு எளிதாக பயணம் மேற்கொள்ளலாம்.
கடந்த 1962-ம் ஆண்டில் சீனா தாக்குதல் நடத்தியபோது உத்தராகண்ட் எல்லையில் அமைந்துள்ள மனா, ஜாதுங் கிராமங்களில் வசித்த மக்கள் வெளியேறினர். கடந்த 70 ஆண்டுகளாக இரு கிராமங்களும் புறக்கணிக்கப்பட்டு வந்தன. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பிறகு மனா, ஜாதுங் கிராமங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது மீண்டும் மக்கள் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தின் சார்தாம் யாத்திரைக்கு ஆண்டுதோறும் 18 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். தற்போது ஓராண்டில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் சார்தாம் யாத்திரையில் பங்கேற்கின்றனர். அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நாடு முழுவதும் 50 சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் உத்தராகண்ட் மாநில சுற்றுலா தலங்களும் மேம்படுத்தப்படும்.
கார்பரேட் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தங்களது கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகளை உத்தராகண்ட் மாநிலத்தில் நடத்தலாம். இந்த மாநிலத்தில் அமைந்துள்ள யோகா, ஆயுர்வேத மையங்களில் புத்துணர்ச்சி பெறலாம். நாடு முழுவதும் செயல்படும் பல்கலைக்கழகங்கள், பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் உத்தராகண்ட் மாநிலத்தில் கல்வி சுற்றுலா மேற்கொள்ளலாம்.
சிலர் வெளிநாடுகளில் திருமணங்களை நடத்துகின்றனர். இதை தவிர்த்து உத்தராகண்ட் மாநிலத்தில் திருமண விழாக்களை நடத்தலாம். நாடு முழுவதும் செயல்படும் திரைப்பட நிறுவனங்கள் இங்கு படப்பிடிப்புகளை நடத்தலாம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.