இந்தியாவா? பாகிஸ்தானா? எது சிறந்த கிரிக்கெட் அணி? – பிரதமர் மோடி அளித்த பதில்

புதுடெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கணினி அறிவியல் விஞ்ஞானி (Computer Scientist) லெக்ஸ் பிரிட்மென். செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளரான இவர் பாட்காஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க் உள்ளிட்ட உலக பிரபலங்களை லெக்ஸ் பிர்ட்மென் பேட்டி எடுத்துள்ளார்.

இந்நிலையில், லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவரிடம் லெக்ஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அந்த கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். 3 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் லெக்ஸ் பிரிட்மேன், பிரதமர் மோடியிடம் சிறந்த கிரிக்கெட் அணி எது? இந்தியாவா? பாகிஸ்தானா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய பிரதமர் மோடி, விளையாட்டுக்கு உலகம் முழுவதையும் உற்சாகப்படுத்தும் சக்தி இருப்பதாக நான் நினைக்கிறேன். விளையாட்டு உணர்வு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைக்கிறது. அதனால்தான் விளையாட்டு மதிப்பிழந்து போவதை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன்.

மனித பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கிறது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். அவை வெறும் விளையாட்டுகள் அல்ல; அவை மக்களை ஆழமான மட்டத்தில் இணைக்கின்றன. இப்போது யார் சிறந்தவர் அல்லது இல்லாதவர் என்ற கேள்விக்கு வருகிறேன். விளையாட்டின் நுட்பங்களைப் பொறுத்தவரை, நான் ஒரு நிபுணர் அல்ல. அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மட்டுமே அதை மதிப்பிட முடியும்.

எந்த அணி சிறந்தது, எந்த வீரர்கள் சிறந்தவர்கள் என்பதை அவர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஆனால் சில நேரங்களில், முடிவுகள் தாங்களாகவே பேசுகின்றன. சில நாட்களுக்கு முன்புதான், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அதன் முடிவு எந்த அணி சிறந்தது என்பதை வெளிப்படுத்தியது என கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.