புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் வறுமை ஒழிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் நகருக்கு வருகை தந்த யோகி, ரோஹின் தடுப்பணை திறப்பு விழா உட்பட ரூ.654 கோடி மதிப்பிலான 629 மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளுக்கு காசோலைகள், ஆயுஷ்மான் அட்டைகள், வேலைவாய்ப்புக்கான நியமனக் கடிதங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். தொழில்முனைவோருக்கு கடன், பொது நலனுக்கு பங்களித்த தனிநபர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி ஆகியவற்றை வழங்கிய யோகி ஆதித்யாநாத், தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது அவர், “சட்டவிரோத நில ஆக்கிரமிப்பைத் தடுப்பதையும், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வீட்டுவசதி போன்ற பொது நலத் திட்டங்களுக்கு அரசு சொத்துகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட வக்பு திருத்த மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
16,000 விவசாயிகள் பயனடையும் வகையில், 5,400 ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ரோஹின் தடுப்பணையின் திறப்பு விழாவில் திறப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நவுதன்வா சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ள இந்த தடுப்பணைக்கு மா பனைலா தேவி என்று பெயரிடப்படும்.
2017-ல் உத்தரப் பிரதேசம் நாட்டின் ஏழாவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. தற்போது நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. சாலை கட்டமைப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் மிகப் பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது.
தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அரசு அடல் குடியிருப்புப் பள்ளிகளை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் முதல்வரின் மாதிரி பள்ளிகள் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம், கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது.
குற்றச் செயல்களை மாநிலம் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. பண்டிகைகளின்போது பாதுகாப்பான சூழலை உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாஃபியா என்ற நிலையில் இருந்த உத்தரப் பிரதேசத்தை, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நிலைக்கு மாற்றி உள்ளோம்.
இளைஞர்களுக்கான தொழில்முனைவு திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன்கள் வழங்கப்படுகிறது. பாகுபாடு இல்லாமல் வளர்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மாநிலத்தில் வறுமையை ஒழித்து, நாட்டின் முதன்மை மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை மாற்றுவோம். இது உறுதி” என தெரிவித்தார்.