ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு அண்மையில் 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கையை சிபிஐ எடுத்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் குற்றங்கள் செய்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பதுங்கியுள்ள குற்றவாளிகளை மீட்டு விசாரணைக்கு அழைத்து வர சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி அண்மையில் தப்பியோடிய குற்றவாளிகள் மூன்று பேரை சிபிஐ இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது. சுஹைல் பஷீர், தவுபிக் நஜிர் கான், ஆதித்யா ஜெயின் ஆகிய 3 பேரையும் சிபிஐ அழைத்து வந்துள்ளது. இவர்களில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி, மிரட்டி பணம் பறிப்பவர்களும் அடங்குவர்.
இவர்கள் இந்தியா அழைத்து வரப்பட்டதையடுத்து அவர்கள் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் தொடங்கும். இதில் பஷீர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கேரளா போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர். நஜிர் கான், ராஜஸ்தானில் மிரட்டல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர். பல்வேறு கிரிமினல் வழக்குகளில் ராஜஸ்தான் போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர் ஆதித்யா ஜெயின்.
இவர்களை அபுதாபி-என்சிபி போலீஸார், கேரளா போலீஸார் உதவியுடன் சிபிஐ-யின் சர்வதேச போலீஸ் கழக யூனிட் (ஐபிசியு) கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது. முன்னதாக அவர்களைக் கைது செய்ய சிபிஐ சார்பில் ரெட் அலர்ட் நோட்டீஸ் விடப்பட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை வெளிநாடுகளில் கைது செய்து சிபிஐ அழைத்து வந்துள்ளது. இவ்வாறு அவ்ர் தெரிவித்தார்.