மும்பை: இந்திய ஓவியர் தியேப் மேத்தாவின் 1956-ஆம் ஆண்டு தலைசிறந்த ஓவியம் ரூ.61.80 கோடிக்கு விற் பனையாகி சாதனை படைத்து உள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியர் களில் ஒருவர் தியேப் மேத்தா. தனது அற்புதமாக படைப்புகளால் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இவரது 1956-ம் ஆண்டு கலைப்படைப்பு ‘ட்ரஸ்டு புல்’. இது கடந்த 2-ம் தேதி மும்பையில் சஃப்ரான் ஆர்ட் அமைப்பின் 5-வது வருடாந்திர விற்பனையில் ஏலம் விடப்பட்டு ரூ.61.80 கோடிக்கு விற்பனையானது.
இது எதிர்பார்க்கப்பட்டதை விட கிட்டத்தட்ட 9 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ஏலத்தில் விற்கப்பட்ட இரண்டாவது மிக விலை உயர்ந்த இந்திய ஓவியம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த ஓவியத்தை ‘சஃப்ரான் ஆர்ட்’ அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த ஓவியத்தில் காளையின் கால்கள் ஒன்றாக பிணைக்கப்பட்டு, அது வலியில் போராடுவது போல் தெரிகிறது, குஜராத்தில் பிறந்த தியேப் மேத்தா, இளமைப் பருவத்திலேயே காளை உருவங்களால் ஈர்க்கப்பட்டார். 1952-ல் மும்பையில் உள்ள ‘சர் ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்’ கல்லூரியில் பட்டம் பெற்றார்.
கடந்த 2009-ல் காலமான தியேப்மேத்தாவின் பிறந்த நாள் நூற்றாண்டு இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப். ஹுசைனின் ஓர் ஓவியம் கடந்த மாதம் நியூயார்க்கில் ரூ.118 கோடிக்கு ஏலம் போனது. இது ஏலத்தில் விற்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த இந்திய ஓவியம் என்ற பெருமையை பெற்றது.