புதுடெல்லி: மனித உழைப்பை மலிவாக்கும் வகையில் நாம் உணவு ஆப்களை உருவாக்குகிறோம். அதேநேரம், சீனர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மின்சார வாகனம் (இவி) போன்றவற்றின் உருவாக்கத்தில் கவனம் செலுத்துகின்றனர் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஸ்டார்ட்அப் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற கோயல் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்திய ஸ்டார்ட்அப்கள் “உணவு டெலிவரி ஆப்ஸ், பேன்சிஐஸ்கிரீம் & குக்கீஸ், உடனடி மளிகை டெலிவரி, பந்தயம் & பேன்டஸி ஸ்போர்ட்ஸ் ஆப்ஸ் மற்றும் ரீஸ்ஸ் & இன்ப்ளூயன்சர் பொருளாதாரத்தை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளோம். ஆனால், மறுபுறம் சீனர்கள், இவி, பேட்டரி தொழில்நுட்பம், செமிகண்டக்டர், ஏஐ, ரோபாட்டிக்ஸ்,ஆட்டோமேஷன், உலகளாவிய தளவாடங்கள், வர்த்தகம், டீப் டெக் & உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்துகின்றனர்.
நாம் உருவாக்கும் உணவு ஆப்கள் சீனர்கள் உணவுக்காக எங்கும் அலையாமல் அவர்கள் ஒரே இடத்திலிருந்து இதுபோன்ற துறைகளில் சாதிப்பதற்கு பெரிதும் உதவுகிறது. 20 லட்சம் அல்லது 50 லட்சம் ரூபாய்க்கெல்லாம் ஸ்டார்ட்அப் பற்றிய நமது புதுமையான பிரகாசமான யோசனைகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். எனவே, நமது ஸ்டார்ட்அப் சூழலில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கு பெறுவதற்கு பதிலாக உள்நாட்டு மூலதனத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். யூனிகார்ன்களால் இதற்கான நிதியத்தை உருவாக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான “ஸ்டெம்” பட்டதாரிகள் தேர்ச்சி பெறுகிறார்கள். நாம் அவர்களை டெலிவரி பாய்ஸ் மற்றும் டெலிவரி கேர்ள்ஸ்-ஆக மாற்றுகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறீர்களா? எதிர்காலத்துக்காக நாம் உழைக்கவேண்டும். உண்மையான பொருளாதார உற்பத்தி திறனுக்குப் பதிலாக சூதாட்டத்துக்கு அடிமையாவதை ஊக்குவித்து வருகிறோம். சீனர்கள், ஷீன், டிஜேஐ, அலிபாபா போன்ற விநியோகா சங்கிலி ஜாம்பவான்களை உருவாக்குகிறார்கள். இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.