புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு தண்ணீர் பாட்டில்களை இந்திய ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் அளிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீருக்கு, இந்திய ரசிகர் ஒருவர் தண்ணீர் பாட்டில்களை அனுப்பும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. நடிகை ஹனியா அமீருக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் இந்த பாட்டில்களை கூரியர் சேவை மூலம் அனுப்பியுள்ளார். சிந்து நதி நீர், நடிகைக்கு இனி கிடைக்காது என்பதால் அவர் மீது வைத்துள்ள அன்பின் காரணமாக இந்த தண்ணீர் பாட்டில்களை அவர் அனுப்பியுள்ளார்.
அந்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் பேசும் நபர், “இந்த சிறுவன் இன்று ஒரு பார்சல் கொண்டு வந்துள்ளார். அதில் என்ன இருக்கிறது பாருங்கள். இந்த தண்ணீர் பாட்டில்களை நடிகை ஹனியா அமீருக்கு இந்த சிறுவன் அனுப்பியுள்ளான்” என்று தெரிவிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஹனியா அமீரின் யூடியூப் சேனலுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 1.80 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.