புதுடெல்லி: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (என்எஸ்ஏபி) நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதன் புதிய தலைவராக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வாரியத்தில், முப்படைகளில் இருந்து ஓய்வுபெற்ற 3 பேர், 2 ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இந்திய வெளியுறவு பணியிலிருந்து (ஐஎப்எஸ்) ஓய்வு பெற்ற ஒருவர் என 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், ராணுவத்தின் தெற்கு பிரிவு முன்னாள் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங், இந்திய விமானப் படையின் மேற்கு பிரிவு முன்னாள் கமாண்டர் ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா மற்றும் ரியர் அட்மிரல் மான்ட்டி கன்னா ஆகியோர் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜிவ் ரஞ்சன் வர்மா மற்றும் மன்மோகன் சிங் மற்றும் ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரி பி.வெங்கடேஷ் வர்மா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
என்எஸ்ஏபி கடந்த 1998-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பகுப்பாய்வு செய்து தங்கள் கருத்துகளை தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு (என்எஸ்சி) வழங்குவதுதான் இதன் பணி. மேலும் என்எஸ்சி-யால் ஒதுக்கப்படும் சில குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்தும் என்எஸ்ஏபி பகுப்பாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்.
இதற்கு முன்பு என்எஸ்ஏபி கடந்த 2018-ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, இதன் தலைவராக ரஷ்யாவுக்கான முன்னாள் இந்திய தூதர் பி.எஸ்.ராகவன் நியமிக்கப்பட்டார்.