சென்னை: யானைகளுக்கான நீர் ஆதாரம் மற்றும் வழித்தடத்தை உறுதி செய்யும் வரை வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் எஃகு கம்பி வேலி அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வனப்பகுதிகளில் இருந்து வனத்தை ஒட்டிய ஊருக்குள் புகுந்து விடும் யானைகளால் அவ்வப்போது உயிரிழப்புகளும், பயிர்கள் சேதமடைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதைத்தடுக்கும் வகையில் ஓசூர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க எஃகு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவையில் தொண்டாமுத்தூர் முதல் தடாகம் வரை 10 கிமீ தூரத்துக்கு எஃகு கம்பி வேலி அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “ஓசூரில் எஃகு கம்பி வேலி அமைக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழலியல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
வனப்பகுதிகளில் யானைகள் வழித்தடம் அமைத்து, அவற்றுக்கான நீர் ஆதாரங்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் வரை வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் எஃகு கம்பி வேலிகள் அமைக்கக்கூடாது, என தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கோவையில் எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.