“அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை… நேரம் வரும்போது அனைத்தையும் சொல்வேன்!” – தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் நேர்காணல்

மற்ற கட்சிகளைப் போலவே தேமுதிக-வும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி செயலாளராக அங்கீகரித்திருக்கிறது தேமுதிக பொதுக்குழு. கூடவே, கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷையும் தேர்வு செய்திருக்கிறார்கள். வெற்றிக் கூட்டணியில் இடம் பிடிப்பது, கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப் பெறுவது உள்ளிட்ட சவால்களை தேமுதிக-வும் எதிர்க்கொள்ள இருக்கும் நிலையில், கட்சியின் புதிய பொருளாளர் எல்.கே.சுதீஷ் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது.

தேமுதிக தலைவர் விஜய்காந்துடன் உங்களுக்கு உறவு மலர்ந்ததை சுருக்க மாகச் சொல்ல முடியுமா?

எனது தந்தை ஆம்​பூர் கூட்​டுறவு சர்க்​கரை ஆலை​யில் பணி​யாற்​றிய​தால் நான் பிறந்து வளர்ந்து எல்​லாமே குடி​யாத்​தத்​தில் தான். பள்​ளிச் சிறு​வ​னாய் இருந்த போதே கேப்​டனின் வெற்​றிப் படங்​களை குடும்​பத்​துடன் பார்த்து ரசித்​திருக்​கிறேன். சென்னை பச்​சையப்​பன் கல்​லூரி​யில் படித்த நான் அதன் மாண​வர் பேரவை தேர்​தலில் போட்​டி​யிட்டு செய​லா​ள​ராக வந்​தேன். அந்த சமயத்​தில் ஹாஸ்​டல் மாண​வர்​கள் கேப்​டனை தனது குடும்​பத்​தில் ஒரு​வ​ராக குறிப்​பிட்​டுப் பேசி​யது எனக்​கும் அவர் மீது ஒரு ஈடு​பாட்டை ஏற்​படுத்​தி​யது. பிறகு, இலங்கை தமி​ழர்​களுக்​காக கேப்​டன் தி.நகரில் நடத்​திய உண்​ணா​விரதத்​தில் சக மாண​வர்​களு​டன் நானும் கலந்து கொண்​டேன். அப்​போது​தான் அவரை முதன் முதலாக நேரில் பார்த்​தேன். அடுத்த சில மாதங்​களில் அவர் எனது சகோ​தரியை பெண் பார்க்க வந்​திருந்​தார். பிறகு, குடும்ப உறுப்​பின​ராகி, அவரை வைத்து ‘நரசிம்​மா’ உள்​ளிட்ட பல வெற்​றிப் படங்​களை தயா​ரித்​து, கேப்​டன் தொடங்​கிய கட்​சிக்​குள்​ளும் வந்​து​விட்​டோம்.

தேமுதிக-வில் அக்கட்சியின் பொருளாளராக உயர்ந்ததை எப்படி உணர்கிறீர்கள்?

மிக​வும் சந்​தோஷ​மாக இருக்​கிறேன். பொதுச்​செய​லா​ளர், அவைத் தலை​வ​ருக்கு பிறகு பொருளாளர் என்​பது எந்த ஒரு அரசி​யல் கட்​சிக்​கும் மிக முக்​கிய​மான பதவி ஆகும். தேமு​தி​க-​வில் எனது சகோ​தரிக்கு முதன்​முதலாக கட்​சி​யில் கேப்​டன் அளித்த பொருளாளர் பதவி இப்​போது எனக்கு கிடைத்​துள்​ளது. கட்​சித் தொண்​டர்​களின் விருப்​பத்​துடன் கேப்​டனின் ஆசி​யோடு அதை நான் பெற்​றுள்​ளேன்.

2005-ல் தென்​சென்னை மாவட்​டத்​தின் தலை​மைப் பொதுக்​குழு உறுப்​பினர் ஆனது தான் எனக்​குக் கிடைத்த முதல் பதவி. 2006 சட்​டப்​பேரவை தேர்​தலில் குடி​யாத்​தத்​தில் போட்​டி​யிட்​டேன். அந்​தத் தேர்​தலுக்கு பின் கேப்​டன் என்னை இளைஞர் அணி செய​லா​ள​ராக்​கி​னார். இப்​ப​த​வி​யில் 11 வருடம் இருந்​த​போது ஒரு பெரிய மாநாட்டை சென்​னை​யில் நடத்​தினேன். 2017-ல் என்னை துணைப் பொதுச்​செய​லா​ளர் ஆக்​கி​னார் கேப்​டன். அதைத் தொடர்ந்து இப்​போது பொருளாள​ராக்​கப்​பட்டு உள்​ளேன்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இன்றும் தொடர்கிறதா?

2024 மக்​கள​வைத் தேர்​தல் வரைக்​கும் அவர்​களோடு கூட்​ட​ணி​யில் இருந்​திருக்​கி​றோம். 2024 மக்​களவை தேர்​தலில் பாஜக கூட்​ட​ணியை விட்டு அதி​முக வில​கி​னாலும் நாங்​கள் அதி​முக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட்​டோம். இப்​போது அதி​முக-​வும் பாஜக-​வும் மீண்​டும் இணைந்​திருக்​கி​றார்​கள். இனி, மீண்​டும் அனை​வ​ரும் ஒன்​றிணைய வேண்​டும். தேமு​திக அக்​கூட்​ட​ணி​யில் தொடர்​வதா வேண்​டாமா என்​பதை எங்​களது பொதுச்​செய​லா​ளர் உரிய நேரத்​தில் முடிவு செய்​வார்.

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து தேமுதிக-வின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

ஜனவரி 9-ல் கடலூரில் தேமு​திக மாநாடு நடை​பெற உள்​ளது. அதில், தேமு​திக யாருடன் கூட்​டணி என்​பதை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் முறைப்​படி அறி​விப்​பார். தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக முன்னமே வாக்குக் கொடுத்திருந்ததா அதிமுக? உறு​தி​யாகக் கொடுத்​தார்​கள். முழுக்க முழுக்க உண்மை இது. நேரம் வரும்​போது அனைத்​தை​யும் வெளிப்​படை​யாகச் சொல்​வேன்.

அப்படி யாருக்கும் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை என்கிறாரே இபிஎஸ்?

அதி​முக அளித்த உத்​தர​வாதத்​தால் தான் நான் 2024 மக்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிட​வில்​லை. இதற்கு முன் நான் 2009-ல் கள்​ளக்​குறிச்​சி​யிலும் 2014-ல் சேலத்​தி​லும் போட்​டி​யிட்​டேன். சேலத்​தில் எனக்​காக மோடி பிரச்​சா​ரம் செய்​தார். 2019-ல் மீண்​டும் பாஜக கூட்​ட​ணி​யில் கள்​ளக்​குறிச்​சி​யில் போட்​டி​யிட்​டேன். 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது குறித்​தும் யோசிக்​கிறேன்.

2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியமைக்கும் என்றார் அமித் ஷா. ஆனால், கூட்டணி ஆட்சி என்று அவர் சொல்லவில்லை என்கிறாரே இபிஎஸ்..?

அதி​முக தலை​வர்​களு​டன் பாஜக என்ன பேசி​யது எனத் தெரிய​வில்​லை. இது இபிஎஸ் மற்​றும் அமித் ஷாவுக்கு இடை​யில் நடந்த பேச்​சு​வார்த்​தை. வேறு யாருக்​கும் இதுகுறித்து முழு​மை​யாகத் தெரிய வாய்ப்​பில்​லை. இரு​வ​ரும் என்ன பேசி​னார்​கள் என்​பது 2026-ல் மக்​கள் தீர்ப்​புக்​குப் பின்​னால் தான் தெரிய​வ​ரும்.

அதிமுக அணிகள் இணைப்பு விவகாரத்தில் கூட்டணித் தோழனாக அதிமுக தலைமைக்கு என்ன யோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?

அவர்​கள் நன்கு அறிந்த இந்த விஷ​யத்​தில் நாம் எது​வும் யோசனை கூற வேண்​டிய அவசி​யம் இல்​லை. அது​வுமில்​லாமல் இன்​னொரு கட்​சியை பற்றி நாம் ஏன் கருத்​துக் கூற வேண்​டும்?

கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கேட்கும் கட்சிகளில் தேமுதிக-வும் உள்ளதா?

இந்த கேள்​வியை இவ்​வளவு சீக்​கிரம் கேட்​கவேண்​டியது இல்லை எனக் கருதுகிறேன். தேர்​தலுக்கு சுமார் ஒரு வருட கால அவகாசம் இருப்​ப​தால் தேமு​திக மாநாட்​டுக்​குப் பிறகு இதுபற்றி பேசுவோம்.

இனி கூட்டணி சேரும் கட்சியிடம் ராஜ்ய சபா சீட் கேட்பதும் நிபந்தனையாக இருக்குமா?

மாநிலங்​களவை உறுப்​பினர் பதவியை பெறு​வ​தில் எங்​களுக்​கும் விருப்​பம் உண்​டு. உகந்த வாய்ப்பு கிடைக்​கும் போது அதைப் பற்றி கண்​டிப்​பாகப் பேசுவோம். அதற்​கான தகு​தி​யும் எங்​கள் கட்​சிக்கு உள்​ளது.

விஜயகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் நடிகர் விஜய். அவர் அழைத்தால் தவெக கூட்டணிக்கு தேமுதிக சம்மதிக்குமா?

தலை​வர் கேப்​டன் மீது நடிகர் விஜய்க்கு நல்ல கருத்து இருந்​தது. அதே​போல், கேப்​ட​னுக்​கும் விஜய்​யுடன் நல்ல நட்பு தொடர்ந்​தது. திரைத்​துறை​யில் நடிகர் விஜய்​யின் வளர்ச்​சி​யில் கேப்​ட​னுக்கு பெரும்​பங்கு உண்​டு. ஆனாலும், நட்​பும் அரசி​யலும் வேறு வேறு. ஆகவே, தவெக உடன் கூட்​டணி வைப்​பது உள்​ளிட்ட அனைத்து விஷ​யங்​கள் குறித்​தும் கடலூர் மாநாட்​டில்​தான் முடிவு செய்​வோம்.

உங்கள் கட்சியிலும் திராவிடம் இருக்கிறது. சீமான் திராவிடத்தை ஒழிப்பேன் என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

திரா​விடத்தை எப்​படி ஒழிக்க முடி​யும்? தமிழ்​நாட்​டில் எல்​லோருமே பெரி​யாரை வைத்​துத்​தான் அரசி​யல் செய்​கி​றார்​கள். சீமான் சொல்​வது அவரது கருத்​து. இதை நாம் கண்​டிக்க வேண்​டிய அவசி​யம் இல்​லை.

எந்த இடத்திலும் இதுவரை தேமுதிக நன்கொடை வசூலிக்காத நிலையில் கட்சியை நடத்துவது கஷ்டமாக இல்லையா?

கேப்​டன் நடிப்​பில் வந்த செல்​வத்​தா​லும், கட்​சித் தொண்​டர்​களே செல​வு​களை செய்து வந்​த​தா​லும், இது​வரை​யிலும் நாம் யாரிட​மும் நன்​கொடை பெற்​ற​தில்​லை. வேட்​பாளர்​களும் தங்​களது சொந்​தப் பணத்​தில் தேர்​தல் செல​வு​களை செய்​வார்​கள். ஆனால், இப்​போது கட்​சிக்கு பொருளுதவி தேவைப்​படு​வ​தால் இனி நன்​கொடை வாங்​கு​வோம். நிதியை நான் இனி திரட்​டு​வேன்.

வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தவர் கேப்டன். ஆனால், தேமுதிக-வில் உங்கள் சகோதரி, நீங்கள், அடுத்து கேப்டனின் மகன் விஜய பிரபாகரன் என வரிசையாக பதவிக்கு வந்திருப்பதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

ஒரே இரவின் மாற்​றத்​தில் எங்​கள் கட்​சிக்​குள் வாரிசுகள் எவரும் பதவி பெற​வில்​லை. ரசிகர் மன்​றம் முதல் அனைத்து வேலை​களை​யும் செய்து கட்சி துவங்​கிய பின்​பும் நான் தொடர்ந்​தேன். சுமார் 20 வருடங்​களாக எனது செயல்​பாடு​களைப் பார்த்த எங்​கள் கட்​சித் தொண்​டர்​கள் எனக்கு ஒரு பதவி அளிக்​கப்பட வேண்​டும் என வலி​யுறுத்​தி​ய​தால் அதை நான் பெற்​றேன். ஏனெனில், ஒரு பதவி​யும் இல்​லாமல் நான் கட்​சி​யில் எந்தவொரு முக்​கிய வேலை​யை​யும் செய்ய முடி​யாது. அப்​படி செய்​தால், நீங்​கள் யார் என்ற கேள்வி வரும் என்​ப​தால் இளைஞரணி​யின் முதல் செய​லா​ளர் பதவி எனக்கு அளிக்​கப்​பட்​டது.

அதே​போல் எனது அக்​கா, கேப்​டனின் பிரச்​சா​ரங்​களில் அவருடன் அனைத்து இடங்​களுக்​கும் சென்று வந்​தார். அத்​துடன் தேர்​தல்​களி​லும் பிரச்​சா​ரம் செய்​திருந்​தமை​யால் 2019-ல் அவருக்கு பொருளாளர் பதவி அளித்​தார் கேப்​டன். அடுத்து பொதுச்​செய​லா​ள​ரா​னார். இதெல்​லாம் சுமார் 15 வருடங்​கள் கட்​சிக்​காக உழைத்த பிறகு வந்த பதவி​கள்.

விஜய பிரபாகரன் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணி என்ன?

விஜய பிர​பாகரனும் 2007 முதல் கட்​சி​யில் தீவிர​மாகப் பணி​யாற்றி வரு​கி​றார். 2024 மக்​கள​வைத் தேர்​தலில் விருதுநகரில் போட்​டி​யிட்டு வென்ற அவரது முடிவு சுமார் 4,000 வாக்​கு​களில் தோல்வி என அறிவிக்​கப்​பட்​டது. இதன் மூலம், அவருக்கு கட்​சி​யிலும், பொது​மக்​களிட​மும் செல்​வாக்கு இருப்​பது தெரி​கிறது. இந்​நிலை​யில், கட்​சிக்கு இளைஞர் அணி செய​லா​ள​ராக ஒரு இளைஞர் தேவை என கட்​சி​யினரும் நிர்​வாகி​களும் கேட்​டமை​யால் அப்​ப​த​வியை அவருக்கு அளித்​தோம். தவிர, எடுத்​தவுடன் அவருக்கு பதவி கொடுத்​து​விட​வில்​லை.

திடீரென தமிழக அரசின் நடவடிக்கைகளை பிரேமலதா பாராட்டியது திமுக அபிமானத்தைப் பெறும் முயற்சியாகக் கருதப்படுகிறதே?

எதிர்க்​கட்சி என்​றாலே எந்​நேர​மும் ஆளும் கட்​சியை குற்​றம் கூறி விமர்​சிக்க வேண்​டும் என்​பது அல்ல. தப்பை எடுத்​துக் கூறி விமர்​சிப்​பதும், நல்​ல​வற்​றைப் பாராட்​டு​வதும்​தான் சரி​யான எதிர்க்​கட்​சி. அதைத்​தான் நாங்​கள் கேப்​டன் காலம் தொட்டு செய்து வரு​கி​றோம். 2011-ல் ஜெயலலிதா முதல்​வ​ராக இருந்​த​போது கேப்​டன் எதிர்க்​கட்சி தலை​வ​ராகி நல்​ல​வற்​றைப் பாராட்​டி​யும் தவறுகளை தட்​டி​யும் கேட்​டார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை விடைபெற்று நயினார் நாகேந்திரன் வந்திருக்கிறாரே..?

நாகேந்​திரனுக்கு வாழ்த்​துகள். அண்​ணா​மலை எனது நல்ல நண்​பர். அவருக்கு இதை விட உயர்ந்த பதவியை பாஜக தலைமை அளிக்​கும் என எதிர்​பார்​க்​கிறேன்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.