நாமக்கல்: சர்வர் கோளாறு காரணமாக திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யாமல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இன்று மேற்குறிப்பிட்ட இரு மையங்களுக்கும் வந்திருந்தனர். இதில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் தீவிர பரிசோதனைக்குப் பின் பயோமெட்ரிக் கருவியில் கைரேகை பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 420 மாணவ, மாணவியருக்கு பின் பயோமெட்ரிக் சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால் காலதாமத்தை தவிர்க்க பயோமெட்ரிக் சிஸ்டம் இல்லாமலே மாணவ, மாணவியர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதைக்கண்ட மாணவ, மாணவியரின் பெற்றோர் தேசிய தேர்வு முகமை நிர்வாகம் போதுமான வசதிகள் செய்யவில்லை என புகார் எழுப்பி திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நகர காவல் துறையினர், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பயோமெட்ரிக் சர்வர் குறைபாடுகள் இருப்பதாகவும், பயோமெட்ரிக் கருவி ஒன்று மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பதிவு செய்யாமல் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தங்கள் குழந்தைகள் நீட் தேர்வு எழுதியும் அரசின் நிர்வாக கோளாறால் அவர்களது தேர்ச்சி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
இதுகுறித்து தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறுகையில், “அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 720 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். 9 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதி உள்ள 711 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் 411 மாணவர்கள் தேர்வு எழுத பயோமெட்ரிக்கில் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் சர்வர் சரியாக வேலை செய்யவில்லை. எனவே மீதமுள்ள 300 மாணவ, மாணவியர் பயோமெட்ரிக் பதிவு செய்யவில்லை. அதற்கு பதில் விடைத்தாள் எண் (ஓஎம்ஆர்) பதிவு செய்து கொண்டு தேர்வு எழுத அனுமதித்துள்ளோம். தேர்வு எழுதுவதில் எந்த காலதாமதமும் ஏற்படவில்லை.” என்றனர்.
இதனிடையே தேசிய தேர்வு முகமை நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசேனன் தலைமையிலானோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “711 பேருக்கும் ஓஎம்ஆர் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதுவே தேர்வு எழுத வந்ததாக கணக்கில் கொல்லப்படும். பயோமெட்ரிக் மாணவர்களை அடையாளம் காணுவதற்கான ஒரு வழிமுறை தான். சர்வர் பாதிப்பினால் தான் அவ்வாறு செய்ய முடியவில்லை. காலதாமதம் எதுவும் ஏற்படவில்லை.” என்றனர்.
இதையேற்ற பெற்றோர் தங்களது மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பெற்றோர் போராட்டத்தால் திருச்செங்கோடு-சங்ககிரி சாலையில் 2 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.