புதுடெல்லி: ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
கடந்த மாதம் 22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா படிப்படியாக துண்டித்து வருகிறது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை, பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுதல் என தொடர்ந்து இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று அவசரமாக கூடியது. கூட்டத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பினர் பஹல்காமில் ந டத்திய தாக்குதல் குறித்து இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரதிநிதி கடும் கண்டனத்தை பதிவு செய்ததாகத் தெரிகிறது.
அதேபோல், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் ஆக்ரோஷமான நடவடிக்கை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்டவை தொடர்பாக பாகிஸ்தான் சார்பிலும் புகார் பதிவு செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்பு? – பாகிஸ்தான் மீது என்ன வகையான தாக்குதல் நடத்தப்படும் என்பது குறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்தே ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். 2014-ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இதேபோல ராணுவ நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம். சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் அரசு ரத்து செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு சாதகமானதாக அமைந்திருக்கிறது.
கடந்த காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் மட்டுமே போர் நடைபெற்றிருக்கிறது. இந்த முறை இந்திய விமானப் படை பாகிஸ்தானின் மேற்கு, வடக்கு எல்லைப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. அதாவது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அந்த மாகாண விமானப்படை தளங்களை இந்திய போர் விமானங்கள் தாக்கலாம்.
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் ரூடாகி நகரில் இந்திய விமானப் படையின் ரகசிய தளம் உள்ளது. அங்கு சுகோய் ரக போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த தளத்தில் இருந்து பாகிஸ்தானின் மேற்கு, வடக்கு பகுதியில் தாக்குதல் நடத்தப்படலாம்.
ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா தனது எதிரிக்கு மின்சார நாற்காலி தண்டனையை நிறைவேற்ற திட்டமிடவில்லை. மாறாக எதிரியின் கழுத்தை சுற்றி நீளமான கயிறால் இறுக்கி வருகிறது’ என்று கூறியுள்ளார். தற்போதைய சூழலில் ஆப்கன் முன்னாள் துணை அதிபரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.