மாயமொழியில் எழுதப்பட்ட புராண இதிகாசங்கள், பழங்கதைப் பாடல்கள் வாசகர்களுடன் தொடர்புகொள்ளும்போது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்ல முடியும்?
சிறுவயதில் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்த தோழியோடு தஞ்சாவூர் பெரிய கோவிலின் வாசலில் அமர்ந்து அவ்வப்போது கவிதைகள் வாசித்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் வீட்டில் மின்சாரம் அடிக்கடி நின்று விடும் அல்லது சேமிப்பதற்காக விளக்குகளை அணைத்து வைத்து விடுவார்கள்.
அதனால் பெரிய கோவில் வாசலில் புல்வெளியில் அமர்ந்து படிக்கச்செல்வோம். அவள் பாடங்களைப் படிக்க, பெரும்பாலும் சுண்டல் வாங்கிவரும் வேலைதான் எனக்கு.
அவள் தேர்வுக்காகப் படித்து முடித்ததும் நூல்களை என்னிடம் கொடுத்துவிடுவாள். அவ்வப்போது அவளிடம் கேட்டுக் கேட்டு நான் வாசிக்கத் தொடங்கியபோது முதலில் படித்தது தோரு தத்தின் லட்சுமண் மற்றும் சீதையின் பாடல்கள்.

வாய்மொழிக் கதைகளாக இருந்தவை புராணங்களாகி அவை இன்னொரு வகையான எழுத்து வடிவத்துக்கு மாறி வரும்போது மேலும் அவை செறிவாகிவிடுகின்றன.
அப்படியாகத் தனது சிறுவயது முதலே வாய்மொழி வழியாகக் கேட்ட கதைகளை மனத்துக்குள் தொகுத்துக்கொண்டு அதனைத் துல்லியமாக வெளிப்படுத்தியவர்களுள் முக்கியமானவர் தோருதத்.
1856ல் பிறந்த வங்க மொழிக் கவிஞர். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் கவிதைகளைப் படைத்தவர். தந்தை கோவின் சுந்தர் தத் ஒரு மொழியியலாளர், இலக்கியத்தின் மீது தீராப் பற்றுக்கொண்டவர், அவரது தாயார் இந்துப் புராணங்களில் மூழ்கியவர்.
தோருதத்துக்கு ஆறு வயதாகவும், மூத்த சகோதரி ஆருவுக்கு எட்டு வயதாகவும், சகோதரர் அப்ஜுவுக்குப் பதினொரு வயதாகவும் இருக்கும்போது கிறிஸ்துவ மதத்தைத் தழுவினார்கள்.
தோரு தத் தனது சகோதரியோடு நெருக்கமாக இருந்தார். இருவரும் சேர்ந்து மில்ட்டனின் ‘பாரடைஸ் லாஸ்ட்‘ பேரிலக்கியத்தைத் திரும்பத் திரும்பப் படித்து அதன் அழகில் மனதைப் பறிகொடுத்தார்கள்.
பிறகு, தோரு தத் ஐரோப்பா சென்று பிரெஞ்சுப் பள்ளியில் படித்தார். லண்டன் கேம்பிரிட்ஜுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்து சில காலம் வாழ்ந்தார். பிறகு கல்கத்தா திரும்பினர்.
இந்தியாவின் ஆன்மிகப் பாரம்பரியத்தைப் புரிந்து கொள்வதற்காகச் சமஸ்கிருதத்தைக் கற்க ஆரம்பித்தார். இந்தியாவில் இருந்தபோது, பிரித்தானியக் கொடூரங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து எழுதியதால் கண்டனத்துக்கு ஆளானார்.
எழுத்துலகில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தோரு தத் 1877-ல் காச நோய் வந்து தனது 21ஆம் வயதிலேயே மரணத்தைத் தழுவியர்.

இவர் வெளியிட்ட முதல்நூல் ‘A sheaf Gleamed in French Fields’, இது பிரெஞ்சுக் கவிஞர்களின் மொழிபெயர்ப்புகளுடன் வெளிவந்தது. அவருடைய மரணத்திற்குப் பிறகு ‘Ancient Ballads and Legends of Hinduism’ என்ற கையெழுத்துப் பிரதியை இவரது தந்தையார் தொகுத்து வெளியிட்டார்.
இதில் ஒன்பது புராணக் கதைகளின் பின்னணியில் எழுதப்பட்ட ‘சாவித்ரி’, ‘லட்சுமண்’, ‘ஜோகத்ய உமா’, ‘தி ராயல் அசெட்டிக் அண்ட் தி ஹிந்த்’, ‘துருவா’, ‘புட்டூ’, ‘சிந்து’, ‘பிரகலாத்’, ‘சீதா’ மற்றும் ‘இதர கவிதைகள்’ என்ற தனிப்பட்ட கவிதைகளும் இருக்கின்றன.
இவரது ‘எங்களது சவுக்கு மரம்‘, ‘தாமரை போன்றவை உலகப்புகழ் பெற்றதோடு கல்லூரி பாடத்திட்டத்திலும் உள்ளன.
சிறுவயதில் சகோதரர்களுடன் மரத்தினடியில் பொழுதைக் கழித்தது பற்றிய நினைவுகளைச் சொல்லும் கவிதையில் சவுக்கு மரத்தின் கம்பீரத்தைச் சொல்வது அகத்தின் அணுகல் என்று சொல்ல வேண்டும்.
நவீன இந்திய இலக்கியத்தின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றெனச் சொல்லப்படுகிறது. இதில் தோரு தத் சவுக்கு மரத்தின் அழகை விவரிக்கிறார். அதில் படர்ந்துள்ள கொடி பெரிய பாம்பினைப் போலிருக்கிறது.
இறுகி வலிமையுடன் இருக்கும் இச்சவுக்கு மரத்தில் சிவப்பு நிறமலர்கள் கூட்டமாகப் போர்வையைப் போல் மரத்தை மூடியிருக்கின்றன. இரவு நேரத்தில் தோட்டத்தில் பறவைகளும் தேனீக்களும் பாடுகின்றன.
குளிர்காலத்தில் யூன் குரங்கு வகைகள் சவுக்கு மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் நிழல் பெரிய நீர்த்தொட்டியில் விழுகிறது. தினமும் நடைப்பயிற்சிக்கு நான் செல்லும் போது இருபுறமும் நிற்கும் சவுக்கு மரங்கள் என் மனதுக்கும் நெருக்கமானது.

அப்படியான ஒரு சவுக்கு மரத்தின் கீழ்தான் தோரு விளையாடியிருக்கிறாள், மரம் அவளிடம் அன்பாக இருந்தது, உருவத்தால் அவளோடு கலந்ததெனச் சொல்லும்போது அவளது இளமைக்கால நினைவுகளைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகியல் நிரம்பிய வரிகளாக இருக்கின்றன.
சகோதரனும் சகோதரியும் இறந்தபின் தோரு அவர்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம், உடனடியாக அவளுக்கு மரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது.
மரமும் அவர்களின் மரணத்திற்காகத் துக்கம் அனுசரித்ததெனத் தனது பாடலின் மூலம் சவுக்கு மரம் போல் நினைவுகளை அழியாமல் இன்னும் வைத்திருக்கிறாள், சவுக்கு மரத்தையும் இலக்கியத்திற்குள் கொண்டுவந்து பக்கவாட்டில் அமரவைத்துவிட்டாள்.
வசன நடையில் எழுதப்பட்ட கவிதைக்குச் ‘சாவித்திரி’ நல்ல உதாரணம். காதலையும், திருமணத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதை. ‘லட்சுமண்- ராமனின் மீது லட்சுமணன் வைத்திருந்த சகோதரத்துவத்தின் ஆழ்ந்த விசுவாசத்தைப் பற்றியது.
உளவியல்ரீதியில் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து, தியாகத்தைப் பிரதிபலிக்கும் சிறந்த ஆண் கதாபாத்திரமாக லட்சுமணின் பாத்திரத்தைச் சித்தரித்து, சீதை மற்றும் லட்சுமணன் இருவரின் உறவை ஒரு நவீன ஓவியம் போல் தனித்துக் காட்டியுள்ளார்.
லட்சுமண் கவிதை எட்டு எட்டு வரிகளாகக் கொண்ட இருபத்தியிரண்டு கன்னிகளைக் கொண்ட உரையாடல் நடையில் எழுதப்பட்டது. இது சீதைக்கும் லட்சுமணனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் செய்யுள் வடிவில் இருக்கிறது.
இராமாயணத்தின் முக்கியப் பாத்திரங்களான ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் வனவாசத்தின்போது காட்டில் லட்சுமணன், ராவணனின் சகோதரியின் மூக்கைச் சிதைத்தான்.

ராமரும் அசுரர்களின் கோபத்துக்கு ஆளானார். செய்த தவற்றுக்குப் பழிவாங்க. மாரீசன் தங்க மான் வடிவத்தில் வருகிறான். ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் தங்கியிருந்த காட்டில் மான் சுற்றித் திரிகிறது.
சீதை தங்க மானின் அழகில் ஈர்க்கப்பட்டாள். மானைப் பெற்றுத் தருமாறு ராமனிடம் கேட்கிறாள். ராமன் தன் மனைவி சீதையை லட்சுமணனின் பொறுப்பில் விட்டுவிட்டு மானைப் பிடிக்கச் செல்கிறான்.
எக்காரணம் கொண்டும் சீதையை விட்டுச் செல்லக் கூடாது என்று லட்சுமணனுக்குச் சொல்கிறான். மழுப்பலான மானை வெகுதூரம் பின்தொடர்ந்த பிறகு, ராமன் அம்பினை விடுகிறான் மானின் மீது பட்டது அம்பு.
கர்ஜிக்கும் குரலுடன் கீழே விழுகிறது. அப்போது ராமனின் குரலில் அழுகுரல் கேட்கிறது. இந்த இடத்தில் தோருவின் கவிதைத் திறக்கிறது.
அது தன் கணவன் ராமனின் குரலென்று சீதை லட்சுமணனிடம் கூறுகிறாள். ஏதாவது செய்து துன்பத்திலிருந்து வெளியே வர உதவுமாறு கேட்கிறாள். அது ராமனின் குரல்தான், உன்னை அழைக்கிறான். எல்லாப் பக்கங்களிலும் எதிரிகள் இருக்கலாம்.
அந்த அழுகை மரண ஓலம் போலிருக்கிறது. நீ ஏன் அமைதியாக இங்கேயே நிற்கிறாய் என லட்சுமணனிடம் கேட்கிறாள். வீணாக நின்று நேரத்தைச் செலவிட வேண்டாமென்கிறாள்.
வாளையும் வில்லையும் எடுக்கும்படி அவனுக்கு அறிவுறுத்துகிறாள். லட்சுமணன் அவளது பேச்சைக் கேட்கவில்லை. தங்களைச் தீமை சூழ்ந்திருப்பதாக உணர்கிறான்.
ஆனால், விரைவாக முடிவெடுத்து, தைரியமாகவும், உடனடியாகவும் செயல்படும்படி அவனைக் கெஞ்சுகிறாள் சீதா. இருந்தாலும் லட்சுமணன் அசையவில்லை. அவனுடைய நடத்தையைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள் சீதா.

அவளுக்குப் பதில் சொல்லாமல் நிற்கிறான். தனியாகச் செல்ல விரும்புகிறாள். அவனைப் பார்த்து ஊமையாகவும் குருடனாகவும் ஆகிவிட்டாயா என்கிறாள். ராமனின் அழுகை இன்னும் அவள் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அவளால் தாங்க முடியவில்லை, ராமனுக்குச் சரியான நேரத்தில் உதவி செய்யாவிட்டால் அவனது மரணத்துக்கு இருவரும் பொறுப்பாவார்கள் என்று புலம்புகிறாள்.
லட்சுமணன் சீதையை அமைதியாக இருக்கும்படி கெஞ்சுகிறான். ராமனின் வீரத்தின் மீது நம்பிக்கையிருக்கிறது, யாரும் ஒன்றும் செய்யமுடியாதென ஆறுதல் கூறுகிறான்.
சிங்கமும் பயமுறுத்தும் கரடியும் ராமனின் அரச தோற்றத்தைக் கண்டு பயந்து அடங்குகின்றன. அவனுடைய கோபப் பார்வையைத் தாங்க முடியாமல் கழுகுகள் வானத்தில் உயரப் பறக்கின்றன.
அவனது நடையின் சத்தம் கேட்டு மலைப்பாம்புகளும் நாகப்பாம்புகளும் ஒளிந்து கொள்கின்றன. அவனுக்கு முன் பாம்புகள் ஒடுங்கி பூமியில் பதுங்குகின்றன, அரக்கர்கள், பூதங்கள் மற்றும் பேய்கள் ராமரின் வலிமையை நம்புகிறார்கள்.
அவர்கள் அவனைக் கண்டு பயந்து திருட்டுத்தனமாக நகர்கிறார்கள். லட்சுமணன் சீதையைப் பயப்படாதே என்று அறிவுறுத்துகிறான்.
எந்த எதிரியும் அவனுக்கு எதிராக நிற்க முடியாது, அவள் எந்த முட்டாள்தனமான எண்ணத்தையும் விரட்டியடித்து, தைரியமாகவும், புத்திசாலியாகவும் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறான்.
சீதை தானே செல்ல விரும்புகிறாள். ராமன் உதவிக்காக யாரையும் அழைக்க மாட்டார். உதவிக்காக அழும் குழந்தையல்ல. வலுவான உலோகத்தால் செய்யப்பட்டவர். அழுகை அவருக்குத் தெரியாத ஒன்று, ராமன் இறப்பதற்குப் பிறந்தவனில்லை. சீதாவைத் தனியே செல்ல வேண்டாமென்று கெஞ்சுகிறான்.

சீதையைப் பத்திரமாகக் காக்க வேண்டுமென ராமன் இட்ட கட்டளையால் அவளுக்கு ஆபத்திருக்கலாம். தம்மைச் சுற்றி பூதங்கள் சுற்றியிருக்கின்றன, ராமனுக்கு எதிராகப் பழிவாங்க விரும்புகிறவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.
அதனால் சீதையை அங்கிருந்து தனியே போகவேண்டாமென்கிறான். கூரிய அம்புகளுடன் போர்க்களத்தில் வீரத்துடன் போரிடுவதைக் கண்டவள். அவன் இப்போது கோழையாகிவிட்டானா?
அவன் மனதில் வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதாவெனக் கேட்கிறாள். அந்த இடத்தை விட்டு வெளியேறாமலிருக்க என்ன காரணமென்றும் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதாவென்றும் வினவுகிறாள்.
பரதன் ராமனின் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றவும் லட்சுமணன் சீதையைக் கைப்பற்றவும் நினைக்கிறார்களோ என்று நினைக்கும்போதே அவளுக்கு வெறுப்பாக இருக்கிறது.
இப்படியாகச் செல்லும் கவிதை பிறகு லட்சுமண் தனது அம்பால் ஒரு கோடு வரைகிறான். இக்கோட்டைத் தாண்டி வெளியே வரவேண்டாமென்று சொல்லிவிட்டு விடைபெறுகிறான்.
அவளுடைய வார்த்தைகள் அவன் இதயத்தை உடைக்க இறந்துபோவதுபோல் உணர்கிறான், சீதையிடம் தன்னை மன்னிக்கும்படி மன்றாடுகிறான்.
அவளை விட்டுச் செல்வதற்கு முன், மங்கலான நிழல்களுக்கு மத்தியில் வாழும் அனைத்து வனப்பகுதிகளையும் அழைக்கிறான். அவர்களின் குரல்கள் தென்றல் வீசி, நீர்வீழ்ச்சிகளின் இரைச்சலில் கலக்கின்றன.
தானும் ராமனும் திரும்பி வரும் வரை அவளை ஆபத்திலிருந்து காப்பாற்றும்படி அவைகளிடம் கேட்கிறான். இறுதியில் லட்சுமணன் ஆயுதங்கள், வில் மற்றும் அம்புகளை எடுத்தான். அவன் முகத்தில் கோபத்தின் சுவடே தெரியவில்லை.
அவன் முகம் ஆழ்ந்த சோகத்தைக் காட்டிக்கொள்ளாமல் தீர்க்கமான முடிவுடன் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் உறுதியுடன் ராமனைத் தேடிச் செல்கிறானென முடிகிறது இக்கவிதை.

இராமாயணக் கதையைத் தழுவி கச்சிதமான கட்டமைப்புடன் எளிமையான மொழி நடையில் இந்தியக் கலாச்சாரத்தைப் பிணைத்த படைப்பு. தாமரை கவிதையும் மற்றொரு முக்கியமான படைப்பு, இதில் தாமரையெனும் கமலப்பூ இயற்கையோடு பிணைந்த ஆன்மிக அடையாளங்களைச் சொல்கிறது.
இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறார் தோரு தத். இந்தியக் கலாச்சாரத்தை மேற்கத்திய இலக்கியத்திற்கு எடுத்துச்சென்ற முன்னோடிக் கவிஞராக விளங்குகிறார்.
இருப்பத்தியொரு வயதிற்குள் இலக்கியம் படைத்து உலகளாவிய இலக்கியத்திற்குள் இடம்பெற்ற தோருவின் குரல் தனித்த குரலாக ஒலிக்கிறது. எளிமையாகவும் இயல்பாகவும் இருக்கும் இவரது எழுத்து வாசிப்பவரின் கைகளைப் பிடித்துக்கொள்ள வைக்கிறது.
அப்படியான தோருவின் கவிதைகளில் எனக்குப் பிடித்ததென்றால், The Tree of life. என்னுடைய கண்கள் மூடியிருந்தன, ஆனால் நான் தூங்கவில்லை, என் கை என் தந்தையின் கைகளில் இருந்ததை உணர்ந்தேன் என்று கவிதை தொடங்கும்போதே கண்களை மூடி கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.
தந்தையின் இருப்புப் பெண் பிள்ளைகளுக்கு எவ்வளவு சுகந்தமென்றால் அது மௌனமாக நேரம் போவது தெரியாமல் கைகளைக் கோர்த்துக்கொண்டு மணிக்கணக்காக அமர்ந்திருப்பது.
அங்கே பேச்சு வார்த்தைகள் தேவைப்படவில்லை. பற்றியிருக்கும் கைகள் எண்ணங்களையும் சொற்களையும் பரிமாறிக்கொள்கின்றன. இதயங்கள் தீண்ட முடியாத மொழியில் பேசிக்கொள்கிறன.

சொற்களின் தேவையின்றி உணர்ச்சிப் பெருக்குடன் ஒவ்வொரு துடிப்பும் உணர்வுகளை விரல்களின் வழி கடத்திச்செல்கின்றன.
கைகளைக் கோர்த்துக்கொண்டு தந்தையுடன் அமைதியாக எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பது இருவருக்கும் பிடித்தமானது என்று சொல்லும் போது உணர்வின் உச்சமான வரிகளில் கவித்துவம் ஏறியமர்ந்துகொள்கிறது.
தேவதை ஓர் இலையை எடுத்து அவளது நெற்றியைத் தொடுகிறது, அந்தத் தொடுதல் தேவதையை விட அழகானது, பரிவும் தெய்வீக அன்பும் வார்த்தைகளால் சொல்ல முடியாத பிரகாசத்தில் மின்னும் சொற்களைப் பற்றிக்கொண்டு மரத்தின் அருகே இருபத்தியொரு வயது தேவதை போல் தோரு நிற்கிறாள்.
தோரு தத்தின் உணர்வலைகள் விசித்திரமான இலைகளின் சுவையான தொடுதல்!