புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா முன்வந்திருக்கும் நிலையில், காஷ்மீர் பிரச்சினை 1000 ஆண்டுகால பிரச்சினை இல்லை, மாறாக அது 78 ஆண்டுகளுக்கு முன்புதான் தொடங்கியது என்று காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி தெரிவித்தார்.
இதுகுறித்து மணிஷ் திவாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவில் உள்ள யாராவது அவர்களது அதிபர் ட்ரம்புக்கு காஷ்மீர் பிரச்சினை 1,000 ஆண்டுகால பிரச்சினை இல்லை என்று தீவிரமாக எடுத்துரைத்தால் நன்றாக இருக்கும்.
காஷ்மீர் பிரச்சினை கடந்த 1947 அக்.22-ல் தொடங்கியது. 78 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திர காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்த போது அது உருவானது. பின்பு 1947 அக்டோபர் 26-ல் மகாராஜா ஹரி சிங் அதனை (காஷ்மீர்) இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளும் அடங்கும். இந்த எளிய உண்மையை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமா?” என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதிவொன்றையும் பகிர்ந்துள்ளார்.
காங்கிரஸ் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், வாஷிங்டனில் இருந்து அறிவிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பின்பு இந்தியா பாகிஸ்தான் அரசுகளால் வெளியிடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விரிவாக விவாதிக்க பிரதமரின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டவும் காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்க் ரூபியோவின் நடுநிலை இடம் பற்றியக் குறிப்பு பல கேள்விகளை எழுப்புவதாக காங்கிரஸ் கருதுகிறது. சிம்லா ஒப்பந்தத்தை நாம் கைவிட்டுவிட்டோமா? மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கான கதவுகளை திறந்து விட்டுவிட்டோமா?
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ராஜதந்திர வழிகள் மீண்டும் திறக்கப்படுகிறதா? பாகிஸ்தானிடம் என்னென்ன உறுதிமொழிகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளன?” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர், அமைதி ஏற்படாவிட்டால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முன்னாதாக ட்ரூத் சமூக ஊடகத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வரலாற்று சிறப்பான மற்றும் வீரதீரமிக்க முடிவினை எடுப்பதில் அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்ததில் நான் பெருமையடைகிறேன். இன்னும் விவாதிக்கப்படாவிட்டாலும், இரண்டு பெரிய நாடுகளுடனும் கணிசமான அளவில் வணிகத்தை அதிகரிக்கப்போகிறேன்.
கூடுதலாக ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில் ஒரு தீர்வினை எட்ட முடியுமா என்பதனைப் பார்க்க உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாக செயல்பட்டமைக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைக்கு கடவுள் அருள் புரியட்டும்” என்று தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இந்தியா மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறது.