ட்ரம்பை விமர்சித்து பதிந்த கருத்தை நீக்கிய கங்கனா – நட்டா அறிவுரை ஏற்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் ட்வீட் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த ட்வீட்டை நீக்குமாறு தேசியத் தலைவர் நட்டா, என்னை தொடர்பு கொண்டார். அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பதிவு இன்ஸ்டாவில் இருந்து நீக்கி விட்டேன்” என கங்கனா தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

கங்கனா டெலிட் செய்த ட்வீட்டில் என்ன சொல்லி இருந்தார்? – “இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர் அமெரிக்க அதிபர். ஆனால் உலக அளவில் அதிகம் விரும்பப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் ஆகியுள்ளார். ஆனால், மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். ட்ரம்ப் ஆல்பா மேல் ஆக இருக்கலாம். ஆனால், நமது பிரதமர் ஆல்பா மேல்-களின் தந்தை.

இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட ரீதியிலான பொறாமையா அல்லது அரசாங்க ரீதியான பாதுகாப்பின்மையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என கங்கனா அதில் தெரிவித்திருந்தார். அந்தக் கருத்தைத் தான் தற்போது அவர் நீக்கியுள்ளார்.

ட்ரம்ப் என்ன சொன்னார்? – தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், “ ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்குடன் எனக்கு சிறிய பிரச்சினை உள்ளது. நான் உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கொண்டு வந்துள்ளீர்கள். ஆனால், நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக கேள்விப்பட்டேன். நீங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதை விரும்பவில்லை. இந்தியாவில் அவர்களே அவர்களை கவனித்துகொள்வார்கள்.

இந்தியாவின் நலன் பற்றி நீங்கள் எண்ணினால், அங்கு தொழிற்சாலை அமைக்கலாம். உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. அங்கு பொருட்களை விற்பது கடினம்” என்றார்.

— Kangana Ranaut (@KanganaTeam) May 15, 2025

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.