“பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும், மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை” – புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி: “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை,” என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, புதுச்சேரியில் தேசியக் கொடி ஏந்தி பாஜக சார்பில் வெற்றி பேரணி இன்று நடைபெற்றது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதி தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேரணியில் அனைவரும் கையில் தேசியக் கொடி ஏந்தியும், 70 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடனும் பங்கேற்றனர். பேரணியானது அண்ணா சாலை வழியாக சென்று அஜந்தா சிக்னல் அருகே முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: “காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். தீவிரவாதிகளின் செயலை கண்டிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி ‘ஆபரேஷன் சிந்தூர்’ திட்டத்தை துவக்கி, இந்தியா மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி, தீவிரவாத அமைப்புகளை அடியோடு அழித்தார்.

அதுமட்டுமின்றி யார், யாரெல்லாம் அந்த அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்து அந்தக் கொடூரமான செயலை செய்தார்களோ அவர்களை கொன்று அழிக்கின்ற மகத்தான பணியை இந்திய ராணுவ வீரர்கள் மிகச் சிறப்பான முறையில் செய்து முடித்திருக்கின்றார்கள். அவர்களுடைய அந்த சிறப்பை போற்றுகின்ற வகையில் புதுச்சேரி மாநில பாஜக சார்பில் பேரணி நடைபெற்றுள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிராக பிரதமரின் அத்தனை நடவடிக்கைகளுக்குப் பின்னால் நாம் நிற்கின்றோம். ராணுவ முப்படை தளபதிகளுக்கும், வீரர்களுக்கும் நமது இந்திய நாடே பின்னால் நிற்கின்றது. அதில் புதுச்சேரி மாநிலமும் சேர்ந்து ஆதரவு, பாராட்டுக்களை தெரிவிக்கின்றது என்ற உள்ளுணர்வோடு உணர்ச்சி பொங்க இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளோம்.

எப்போதும் பிரதமர் எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை. பிற நாடுகளுடன் நட்போடு இருப்பதைத்தான் அவர் விரும்புவார். இரு தினங்களுக்கு முன்பு கூட பிரதமர் நேரடியாக பஞ்சாப் விமான படை தளத்துக்கு சென்று ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். எந்தவித தாக்குதலுக்கும், அணு ஆயுதங்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். எந்தவித தாக்குதலையும் எதிர்கொள்ளவதற்கும், பதிலடி கொடுக்கவும் தயாராக இருக்கின்றோம் என்று சவால் விடுத்திருக்கின்றார்.

அத்தகைய நெஞ்சுரமிக்க தலைவரான பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு நாட்டுக்கும் பயந்துபோவதோ, அடிபணிந்துபோவதோ அவரது வாழ்க்கை வரலாற்றிலேயே கிடையாது. புதுச்சேரியைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கான அனைத்து சலுகைகளும் துறையின் மூலம் வழங்கிக் கொண்டிக்கின்றோம். துணை ராணுவத்தினருக்கான அத்தனை சலுகைகளும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.