பெங்களூரு: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளை ஒழிக்கவும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் அவர்களுக்கு ஆதரவளிக்காமல் இருக்கவும் இந்தியா இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் கோப்பல் மாவட்டத்தில் உள்ள கினிகேரா விமானப்படை தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, “காஷ்மீரில் 26 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு உதவுவதும் அடைக்கலம் கொடுப்பதும் பாகிஸ்தான்தான். என்னைப் பொறுத்தவரை, நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அதைப் பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும், பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு உதவாமல், ஒத்துழைக்காமல் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும், பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாம் அமைதியாக இருக்க முடியாது. பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரவளித்து வருகிறது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதத்துக்கு எதிரான ஓர் அவசியமான நடவடிக்கையாகும். அதன் மூலம் பயங்கரவாதிகளை அழிக்க இந்தியாவுக்கு சட்டப்பூர்வமான வாய்ப்பு கிடைத்தது.
தேவையான ராணுவ நடவடிக்கையை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. தேசிய பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும்போது, நமது இறையாண்மைக்கு சவால் விடும்போது, நாம் தீர்க்கமாக பதிலளிக்க வேண்டும். போரைத் தவிர்ப்பது பற்றிய எனது வார்த்தைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன, அதே நேரத்தில் எனது பெரிய கருத்து புறக்கணிக்கப்பட்டது. பின்னர், நான் போருக்கு முற்றிலும் எதிரானவன் என்று சித்தரிக்கப்பட்டது. நான் அதை ஒருபோதும் சொல்லவில்லை.
தேசிய பாதுகாப்பு என்று வரும்போது, யாராவது நம்மைத் தூண்டும்போது, நாம் அமைதியாக இருக்க முடியாது. நாம் போர் தொடுக்க வேண்டும். நாம் நமது ஒற்றுமையைப் பேண வேண்டும். அதனால்தான் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட்டபோது, முழு தேசமும் ஒற்றுமையாக நின்றது,. பிரதமர் நரேந்திர மோடியும், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் ஏற்கனவே போர் நிறுத்தம் குறித்துப் பேசியுள்ளனர். இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முந்தைய நாள் மற்றும் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கைகள் வேறாக உள்ளன. ட்ரம்ப்பின் ஆரம்ப அறிக்கை அதிக உண்மை என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்தார்.