புதுடெல்லி: பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று சர்வதேச அணுசக்தி கழகம் (ஐஏஇஏ) கூறியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து ஐஏஇஏ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாகிஸ்தானில் எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் அணுக் கதிர்வீச்சு கசிவு இல்லை” என்றார்.
முன்னதாக, பாகிஸ்தானில் அணுசக்தி அமைப்புகள் அமைந்திருக்கும் கிரானா ஹல்ஸ் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக வந்த குற்றச்சாட்டுகளை விமானப்படை செயல்பாடுகளுக்கான இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ.கே.பத்ரி நிராகரித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “கிரானா ஹில்ஸ் பகுதியை நாங்கள் தாக்கவில்லை. அங்கு என்ன வேண்டுமானாலும் இருக்கலாம், நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை” என்றார்.
இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தானின் சர்கோதாவில் உள்ள ஒரு விமானப்படை தளமும் சேதம் அடைந்தது. இந்த விமானப் படை தளம், கிரானா ஹல்ஸ் பகுதியில் உள்ள அணு ஆயுத சேமிப்புடன் கிடங்குடன் சுரங்கம் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.