புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, ராணுவத்துக்கு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனையடுத்து துணை பட்ஜெட் மூலம் ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்குவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் பெறப்படலாம். இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஆயுதப்படைகளின் தேவைகள், அத்தியாவசிய கொள்முதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 9.53% அதிகமாகும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டில், பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் ரூ.2.29 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே இந்த ஆண்டு, ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது மொத்த பட்ஜெட்டில் 13.45% ஆகும்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழித்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களின் அதிரடி பாய்ச்சலை உலகுக்கு காட்டியது.
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பின்னர் மே 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், “இந்த நடவடிக்கையின் போது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் நம்பகத்தன்மை உறுதியாக நிரூபிக்கப்பட்டது. 21ம் நூற்றாண்டின் போரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான நேரம் வந்துவிட்டது என்பதை உலகம் இப்போது அங்கீகரிக்கிறது.” என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.