அஜித் தற்போது ரேஸ், சினிமா என இரண்டு பக்கமும் மிளிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அத்தோடு ரேஸிங்கிலும் ஒரு வெற்றியை அஜித் பதிவு செய்திருந்தார்.

இதுமட்டுமின்றி, சமீபத்தில் ‘பத்ம பூஷன்’ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பெற்றிருந்தார்.
இந்நிலையில் அவருடைய பிட்னெஸ் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்தப் பேட்டியில் பேசியிருக்கிறார் அஜித்.
பேச தொடங்கிய அஜித், “ஒரு காலத்தில் நான் பருமனாக இருந்தேன். ஆனால் ரேசிங்கிற்கு திரும்ப முடிவு செய்த நாளில் மீண்டும் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன்.
கடந்த 8 மாதங்களில், அதாவது ஆகஸ்ட் 2024 முதல் இப்போது வரை 42 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்.
உணவுக் கட்டுப்பாடு, நீச்சல், சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளினால்தான் இது சாத்தியமானது.

நான் டீடோட்டலராகவும், சைவ உணவு உண்பவராகவும் மாறிவிட்டேன். மிகவும் உடல் தகுதியுடன் இருக்க தேவையான அனைத்தையும் செய்கிறேன்.
ஏனெனில் நீண்டகால ரேஸ்கள் மிகவும் கடினமானவை. உயர்ந்த நிலைகளை அடைய, ரேசிங்கிற்கு என் முழு இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும்.
அதை இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.