பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்துவருகிறது. குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனிடையே மேக்கேதாட்டு, கனகபுரா, பிலிகுண்டுலு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரியின் துணை நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோடை காலத்திலும் காவிரியில் வெள்ளம் பாய்வதை காண முடிகிறது.
கர்நாடக – தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்துக்கு நேற்று முன்தினம் வரை 700 கன அடி நீர் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று கனமழை காரணமாக தமிழகத்துக்கு செல்லும் நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் எல்லையோர தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.