டெல்லி,
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தவும், பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிராக நட்பு நாடுகளை ஒன்றிணைக்கவும் 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சசி தரூர்( காங்கிரஸ்) ரவி சங்கர் பிரசாத் (பாஜக) , சஞ்சய் குமார் ஜா (ஜேடியு), பைஜயந்த் பாண்டா (பாஜக) , கனிமொழி கருணாநிதி (திமுக) , சுப்ரியா சுலே (என்சிபி), ஸ்ரீகாந்த் ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா) என மொத்தம் 7 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அனைத்துக்கட்சி தூதுக்குழு வரும் 22ம் தேதி முதல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்த உள்ளது.
இந்த அனைத்துக்கட்சி குழுவில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூரும் இடம்பெற்றுள்ளார். இவர் ஒரு குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, அனைத்துக்கட்சி தூதுக்குழு தலைவராக சசிதரூரின் நியமனமிக்கப்பட்டுள்ள நிகழ்வு காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சசிதரூர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய சசிதரூர் கூறியதாவது,
அனைத்துக்கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இருப்பதாக நான் பார்க்கவில்லை. என்னைபொறுத்தவரை நம்மிடம் நாடு இருந்தால்தான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நாம் அனைவரும் இந்தியர்கள். நம் நாடு இக்கட்டான பிரச்சினையில் இருக்கும்போது மத்திய அரசு நாட்டு மக்களின் உதவியை நாடுகிறது. உதவியை நாடும்போது நீங்கள் என்ன பதில் கூற முடியும். நம்மை பற்றி உலக நாடுகள் என்ன கூறுகின்றன என்பது பற்றி நாம் அனைவரின் பங்கும் இருக்க வேண்டும். ஆகையால் தான் நான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். தூதுக்குழுவை நான் தலைமை தாங்கி செல்வது குறித்து காங்கிரஸ் எதேனும் நினைத்தால் அதை காங்கிரஸ் தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். என்னை யாரும் சுலபமாக அவமானப்படுத்த முடியாது. என்னுடைய மதிப்பு எனக்கு தெரியும் . நாட்டிற்கு பணியாற்ற மத்திய அரசு எனக்கு அழைப்பு விடுத்தது அதை ஏற்றுக்கொண்டேன். நாட்டுக்கான பணி என்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை’ என்றார்.