ஹோசபேட்(கர்நாடகா): பிரதமர் மோடி தலைமையிலான அரசு உரிய பாதுகாப்பை வழங்காததன் காரணமாகவே பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதன் 2-ம் ஆண்டு விழா ஹோசபேட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவை பலவீனமாக பார்க்கிறது. சீனாவின் ஆதரவுடன் இந்தியாவுக்கு தொந்தரவு செய்ய நினைக்கிறது. இதுபோன்ற விஷயங்களை நம் நாடு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. நாங்கள் இதில் ஒன்றுபட்டுள்ளோம். நாட்டை எதிர்ப்பவர்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு ஆதரவை வழங்கினோம். நாடு முக்கியமானது. அதற்குப் பின்னர்தான் மதம், சாதி உள்ளிட்ட விஷயங்கள்.
கடந்த மாதம் நிகழ்ந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னதாக ஓர் உளவுத் துறை அறிக்கையைப் பெற்ற மோடி, அதன் அடிப்படையில் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். அந்த உளவுத் தகவல் வெளிப்படுத்தப்பட்டிருந்தால் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருக்க மாட்டார்கள். பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததற்கு அங்கு மோடி அரசு பாதுகாப்பை வழங்காததே காரணம்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களின் தூதுக் குழுக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. ஒருதலைப்பட்சமாக அவர் முடிவெடுத்தார். எனினும், நாட்டின் பொருட்டு, நாங்கள் எதுவும் சொல்லவில்லை. வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவின் ஒரு பகுதியாக எங்கள் பிரதிநிதிகளை அனுப்புகிறோம். நாட்டைக் காப்பாற்றுவதே காங்கிரஸின் நோக்கமாகும். இந்த விஷயத்தில் கட்சி எல்லைகளை நாங்கள் பார்க்கவில்லை. பல ஆண்டுகளாக அடிமைத்தனத்தின் கீழ் இருந்த நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த கட்சி காங்கிரஸ். எனவே, அதைக் காப்பாற்றுவது எங்கள் கடமையாகும்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க 2 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், ஒருமுறை கூட அதில் பிரதமர் கலந்து கொள்ளவில்லை. இதுபோன்ற கூட்டங்களுக்கு நாங்கள் செல்லவில்லை என்றால், எங்களை தேச துரோகிகள் என்பார்கள். ஆனால், கலந்து கொள்ளாத பிரதமர் ஒரு தேசபக்தர்!
முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளனர். மகாத்மா காந்தியும் தனது வாழ்க்கையை தியாகம் செய்தார். அத்தகைய கட்சியை நீங்கள் குறை கூற முயற்சிக்கிறீர்கள். அதன் தலைவர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை போன்ற ஏஜென்சிகள் மூலம் வழக்குகளை பதிவு செய்கிறீர்கள். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் யாருக்கும் வணங்காது. நாங்கள் நாட்டுக்காக எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறோம், ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டுக்காக போராடவில்லை. அவர்கள் நாட்டில் ஒரு தவறான செயல்களை நடத்துகிறார்கள்,” என்று கார்கே குற்றம் சாட்டினார்.