புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதியின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் பயண விவரங்கள் குறித்தும் அதிதீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹிசாரைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33), பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மே 16 அன்று கைது செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் மற்றும் பிஎன்எஸ்-ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கடந்த இரண்டு வாரங்களாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 12 பேரில் ஜோதியும் ஒருவர். வட இந்தியாவில் செயல்படும் பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வலையமைப்பை புலனாய்வு ஏஜென்சிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.
ஜோதியிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான், சீனா மற்றும் வேறு சில நாடுகளுக்கு ஜோதி சென்றதாகக் கூறப்படும் நிலையில், மத்திய நிறுவனங்கள் மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் அவரது பயண விவரங்களை விசாரித்து வருவதாக ஹிசாரில் உள்ள மூத்த ஹரியானா காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜோதி எந்தெந்த நாடுகளுக்கு சென்றார், எந்த கால வரிசையில் சென்றார் என்பதை அறிய முழுமையான நிகழ்வுகளின் பயணச் சங்கிலியை வரைய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக, அவரது அறியப்பட்ட வருமான ஆதாரங்கள் யாவும் அவரது வெளிநாட்டுப் பயணங்களை நியாயப்படுத்தவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும், அவரது நிதி பரிவர்த்தனைகளும் ஸ்கேனிங்கின் கீழ் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோதியின் மடிக்கணினியின் தடயவியல் பகுப்பாய்வு நடந்து வருவதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா? – ஹரியானாவின் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவரது தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா தச்சு தொழிலாளி ஆவார். மிகச் சிறிய வீட்டில் ஏழ்மையான சூழலில் வளர்ந்த ஜோதி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டார். ஹிசாரில் பிஏ பட்டம் பெற்ற அவர் வேலை தேடி டெல்லி சென்றார். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு மாதம் ரூ.20,000 சம்பளம் கிடைத்தது. கடந்த 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில் அவர் வேலையிழந்தார்.
இதன்காரணமாக அவர் மீண்டும் ஹரியானாவின் ஹிசாருக்கு திரும்பினார். அப்போதுதான் அவர் சமூக வலைதள பக்கங்கள் மீது கவனம் செலுத்தினார். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூபில் கவர்ச்சிகரமான உடைகளில் தோன்றினார். மிக குறுகிய காலத்தில் அவர் பிரபல யூடியூபராக மாறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு சுற்றுலா விசா பெற ஜோதி சென்றார். அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி டேனிஸ் என்ற எஹ்சான் உர் ரஹீமின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நெருக்கமாக பழகினர். இதன்பிறகு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் மிக முக்கிய உளவாளியாக ஜோதி மல்ஹோத்ரா மாறினார்.
கடந்த 2023-ம் ஆண்டில் 10 நாள் சுற்றுலா விசாவில் அவர் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் மூத்த அதிகாரிகள் ஷாகீர், ராணா ஷெபாஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்தியாவுக்கு திரும்பிய பிறகு ஐஎஸ்ஐ அதிகாரிகளோடு தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஜோதி தொடர்பில் இருந்தார். ஐஎஸ்ஐ அதிகாரி ஷாகீர் என்பவரின் செல்போன் எண்ணை தனது செல்போனில் ஜாட் ரந்த்வா என்ற பெயரில் அவர் பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சென்றபோது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகளும் அந்த நாட்டின் பஞ்சாப் மாகாண முதல்வருமான மரியம் நவாஸை, ஜோதி சந்தித்துப் பேசியிருக்கிறார். பலமுறை அவர் சீனாவுக்கும் சுற்றுலா சென்று உள்ளார். பாகிஸ்தான், சீனாவுக்கு செல்ல அவருக்கு மிக எளிதாக விசா கிடைத்திருக்கிறது. அதோடு பாகிஸ்தானின் மூத்த அரசியல் தலைவர்களை மிக எளிதாக சந்தித்து பேசியிருக்கிறார். இது இந்திய உளவுத் துறைக்கு சந்தேகத்தை எழுப்பியது. அவரை மீக நீண்ட நாட்களாக இந்திய உளவுத் துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். தற்போது வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். பாகிஸ்தான் மட்டுமன்றி சீனாவுக்கும் அவர் உளவாளியாக செயல்பட்டிருக்கிறார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹிசார் எஸ்பி சஷாங்க் குமார் சவான் கூறும்போது, “இந்தியாவை சேர்ந்த சமூக வலைதள பிரபலங்களை, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தங்களின் உளவாளிகளாக மாற்றியிருக்கிறது. இதற்காக இந்திய யூடியூபர்களுக்கு பெரும் தொகை வாரியிறைக்கப்பட்டு உள்ளது. மத்திய உளவுத் துறையின் தகவலின்பேரில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். முதல் வகுப்பு விமான பயணம், நட்சத்திர ஓட்டல்கள், ஹிசாரில் சொகுசு வீடு என அவர் ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறார். எந்தெந்த வகைகளில் அவருக்கு பணம் வந்தது. யார் யாருடன் அவர் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்” எனறு சஷாங்க் குமார் சவான் தெரிவித்தார்.