IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் தற்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 5 அணிகள் பிளேஆப் ரேஸில் இருந்து வெளியேறிவிட்டன. குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
IPL 2025: 4வது அணி எது?
இன்னும் ஒரே ஒரு இடத்திற்கு மட்டும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே கடுமையான மோதல் நிலவுகிறது. நாளை (மே 21) மும்பையில் நடைபெறும் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை வெற்றிபெற்றால், அந்த அணி நேரடியாக பிளே ஆப் செல்லும், டெல்லி வெளியேறும்.
ஆனால், ஒருவேளை டெல்லி வென்றுவிட்டால் நாம் அனைவரும் மே 24ஆம் தேதிவரை காத்திருக்க வேண்டியிருக்கும். அன்று டெல்லி – பஞ்சாப் இடையே டெல்லி வென்றால் அந்த அணி நேரடியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். ஒருவேளை டெல்லி அந்த போட்டியில் தோற்று, மே 26ஆம் தேதி பஞ்சாப் – மும்பை இடையேயான போட்டியில் மும்பை வென்றால் மும்பை தகுதிபெறும். எனவே, பிளே ஆப் செல்லும் 4 அணிகள் என்ன என்பது நாளை தெரிந்துவிடுமா அல்லது இன்னும் இழுத்துக்கொண்டுச் செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
IPL 2025: பிளே ஆப் போட்டிகள் எங்கெங்கு நடைபெறும்?
இந்நிலையில், ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் நடைபெறும் மைதானம் தற்போது அறிவிக்கப்பட்டது. வரும் மே 29ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதிவரை பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. குவாலிஃபயர் 1 (மே 29) மற்றும் எலிமினேட்டர் போட்டி (மே 30) வரும் நியூ சண்டிகர் நகரில் உள்ள முலான்பூரிலும், குவாலிஃபயர் 2 (ஜுன் 1) மற்றும் இறுதிப்போட்டி (ஜூன் 3) குஜராத்தின் அகமதாபாத் நகரிலும் நடைபெற இருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் பிளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற இருந்தன. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக 10 நாள்கள் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போனதை அடுத்து தற்போது மைதானங்கள் மாற்றப்பட்டுள்ளன. மேலும், வானிலை மற்றும் பிற விஷயங்களை கருத்தில் கொண்டு முலான்பூர் மற்றும் அகமதாபாத் மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
IPL 2025: பஞ்சாப்புக்கும், குஜராத்துக்கு சாதகம்
அதுமட்டுமின்றி வரும் மே 22ஆம் தேதி பெங்களூரு நகரில் நடைபெற இருந்த ஆர்சிபி – ஹைதராபாத் போட்டி தற்போது லக்னோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்சிபி அணிக்கு அடுத்து ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுடன் போட்டிகள் இருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளில் வென்றால் மட்டுமே ஆர்சிபி முதலிரண்டு இடங்களை பிடிக்க முடியும்.
நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு வந்துவிட்டாலும் கூட எந்த அணி, எந்த இடத்தில் தொடரை நிறைவுசெய்யும் என்பதை கடைசி போட்டி வரை அறுதியிட்டு கூற முடியாது. குறிப்பாக முதலிரண்டு இடங்களுக்கு கடும் போட்டி நிலவும். மேலும், பஞ்சாப் மற்றும் அகமதாபாத் நகரில்தான் பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. இது பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு சாதமானது எனலாம்.