இந்தியா உடனான மோதல் எதிரொலி: சீனாவுடன் வர்த்தக ரீதியாக நெருங்கும் பாகிஸ்தான்!

சீனாவும், பாகிஸ்தானும் வர்த்தக தொடர்புகள், முதலீட்டு விவகாரங்களில் ஆழமான நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், இதன்மூலம் சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை விரிவாக்கம் செய்ய வியூகம் வகுத்திருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாக இந்தியா விளக்கமளித்தது. ஆனாலும், பாகிஸ்தான் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்நிலையில், இரு நாடுகளும் மே.10-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

சீனாவுடன் திடீர் நெருக்கம்: எங்கே அணு ஆயுதப் போராக மாறிவிடுமோ என்ற அச்சத்தின் விளிம்பு வரை சென்ற இந்தியா – பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் தற்போது சீனாவுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யை சீனத் தலைநகர் பீஜிங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துள்ளார்.

அப்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் கலைந்து, விரிவான மற்றும் நீடித்த போர் நிறுத்தத்தை எட்டும் முயற்சிகளை மேற்கொள்ள ஒப்புக் கொண்டதற்கு சீன வெளியுறவு அமைச்சர் பாராட்டியுள்ளார். அதேவேளையில், பாகிஸ்தான் தனது தேசத்தின் இறையாண்மையை, பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க சீனா துணையிருக்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம் அவர் உறுதியளித்துள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

அதுமட்டுமல்லாது, சீனாவும்பாகிஸ்தானும் வர்த்தகம், முதலீடு, வேளாண் துறை மற்றும் தொழில்துறையில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டதகத் தெரிகிறது. ஆனால், அது தொடர்பான விரிவான விவரங்கள் ஏதும் பகிரப்படவில்லை.

மேலும், இஷாக் தர் மற்றும் வாங் யி இணைந்து ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாக்கியுடனும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிப்பது பற்றி அப்போது ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் நீட்சியாக, சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் அடுத்த சந்திப்பு ஆப்கன் தலைநகர் காபூலில் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது. அந்தச் சந்திப்பின்போது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்ட விரிவாக்கம் பற்றி ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.

பெல்ட் அண்ட் ரோடு திட்டம் என்றால் என்ன? – சீன அதிபர் ஜி ஜின்பிங் 2013-ம் ஆண்டு பெல்ட் அண்ட் ரோடு (பிஆர்) திட்டத்தை செயல்படுத்துவாக அறிவித்தார். ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் வரலாற்று ரீதியாக இருந்து வரும் வர்த்தக பாதையை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும் என சொல்லப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் உலக நாடுகளை சீனா தங்கள் நாட்டுடன் போக்குவரத்து மூலம் இணைக்கும். சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் சாலை போக்குவரத்தை ஏற்படுத்தும். அதேபோல் கடல் வழியே போக்குவரத்தை ஏற்படுத்தி சீனாவில் இருக்கும் துறைமுகங்களை உலகில் இருக்கும் பிற துறைமுகங்கள் உடன் இணைக்கும். இதுதான் தி பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (The Belt and Road Initiative) திட்டம் ஆகும்.

சீனாவின் ராஜதந்திரம் – ஆனால் இத்திட்டம் பிற நாடுகளை கடன் வலையில் சிக்க வைக்கும் சீனாவின் ராஜதந்திர நடவடிக்கை என்ற விமர்சனங்களேஅதிகம் உள்ளன. குறிப்பாக இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக இருப்பதாக ஏற்கெனவே உலக அரங்கில் பல விமர்சனங்கள் உள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் – சீனா வர்த்தக ஒத்துழைப்பு மேலும் அந்த நாட்டை நெருக்கடிக்கே தள்ளும் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.