புதுடெல்லி: பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்கான ராஜதந்திர முயற்சியாக மத்திய அரசின் வெளிநாட்டுத் தூதுக்குழுக்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா வரவேற்றுள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடந்த ஆபரேஷன் சிந்தூருக்கு உடனடி ஆதரவு அளித்திருந்த காங்கிரஸ் கட்சி, மத்திய அரசின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்களை திசைதிருப்பும் முயற்சி என்று விமர்சித்துவரும் நிலையில், மத்திய அரசின் இந்த முயற்சியை சசி தரூருக்கு பின்பு பாராட்டியிருக்கும் இரண்டாவது காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடகமொன்றிடம் பேசிய ஆனந்த் சர்மா கூறுகையில், “பயங்கரவாதத்தை ஆதாரிப்பதில் பாகிஸ்தானின் பங்கு குறித்த உலகளாவிய பொதுக்கருத்தை உணர தேவையான முக்கியமான முயற்சி இது. இந்தியா ரத்தம் சிந்திவிட்டது. நாம் அதிக விலை கொடுத்து விட்டோம். இது பதிலடி கொடுக்கும் நேரம். ஆனால் அது அளவிடப்பட்டது, கட்டுப்படுத்தப்பட்டது இதனை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்-ன் யுபிஏ அரசும் இதே போன்ற ராஜதந்திர முயற்சியை எடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான சர்வதேச முயற்சிகளுக்காக முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தியும், நரசிம்ம ராவும் முயற்சிகள் எடுத்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
வரும் நாட்களில் தென்னாப்பிரிக்கா, எகிப்து, கத்தார் மற்றும் எத்தியோப்பியாவுக்கு செல்ல இருக்கும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் குழுவில் ஆனந்த் சர்மாவும் இடம்பெற்றுள்ளார். வெளிநாட்டு தூதுக்குழுவுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட நான்கு எம்.பி.க்களில் தேர்வு செய்யப்பட்ட ஒரே எம்பி ஆனந்த சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மற்ற மூவர், கவுரவ் கோகய், சைது நசீர் ஹுஸ்சைன் மற்றும் அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங். இவர்களை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியில் இருந்து சசி தரூர், மணீஷ் திவாரி, அமர் சிங் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகிய எம்.பி.களை மத்திய அரசு அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுக்களுக்கு தேர்வு செய்துள்ளது. இவர்களைக் கட்சி பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் சர்மாவுக்கு முன்பாக, மத்திய அரசின் இந்த முயற்சியை வரவேற்றிருந்த சசி தரூர், “பிரதிநிதிகள் குழுவினை வழிநடத்துவது மிகவும் பெருமையானது. இதில் நான் எந்த அரசியலையும் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில், தேசம் என்ற ஒன்று இருக்கும் போது அரசியல் முக்கியமானது. நாம் அனைவரும் இந்தியர்கள். நாடு சிக்கலில் இருக்கும் போது, மத்திய அரசு குடிமகனிடமிருந்த உதவி கேட்கும் போது வேறு என்ன பதில் நீங்கள் கூற முடியும் ” என்று தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பயங்கரவாத்துக்கு எதிரான இந்தியாவின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை குறித்து விளக்கமளிக்க அமெரிக்கா, பனாமா, கயானா, கொலம்பியா, பிரேசில் செல்ல இருக்கும் பிரதிநிதிகள் குழுவுக்கு சசி தரூர் தலைமை தாங்குகிறார்.