புதுடெல்லி: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்திவிட்டு, பயங்கரவாத சூழலுக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானை ஈடுபடுமாறு துருக்கி கடுமையாக வலியுறுத்தும் என எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தவும், பல தசாப்தங்களாக அது வளர்த்து வரும் பயங்கரவாத சூழலுக்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை எடுக்குமாறு, பாகிஸ்தானை துருக்கி கடுமையாக வலியுறுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஒருவருக்கொருவரின் கவலைகளின் உணர்திறன்கள் அடிப்படையில் உறவுகள் கட்டமைக்கப்படுகின்றன.
சிலிபி விவகாரம் இங்குள்ள துருக்கி தூதரகத்துடன் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட முடிவு சிவில் விமானப்போக்குவரத்து பாதுகாப்புத் துறையால் எடுக்கப்பட்டது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து துருக்கி கூறிய கருத்து, இந்தியா – துருக்கி இடையேயான உறவில் விரசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான ராணுவ மோதலின் போது பாகிஸ்தான் அதிக அளவில் துருக்கிய ட்ரோன்களைப் பயன்படுத்தியது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது ஜெய்ஸ்வால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவால் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இடையேயான மே 10ம் தேதி சந்திப்புப் பற்றியும் கூறினார். அவர் கூறுகையில், “நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், சீன வெளியுறவு அமைச்சர் மற்றும் எல்லைதாண்டிய விவகாரங்களின் சிறப்பு பிரதிநிதி வாங் யி-யுடன் மே 10ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாகிஸ்தானிலிருந்து வெளிப்படும் எல்லைதாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தோவால் வெளிப்படுத்தினார்.
பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் உணர்திறன் போன்றவை இந்தியா – சீனா உறவின் அடிப்படையாக உள்ளது என்பதை சீனா அறிந்திருக்கிறது” என்றார்.