‘விலங்கு’ வெப் சீரிஸ் இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மாமன்’.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருக்கிறார்.
தவிர ராஜ்கிரண், ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மே 16 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது.
படத்தின் வரவேற்பு குறித்து தொடர்ந்து சூரி செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சூரி, “எனக்கு நேரம் கிடைக்கும்போது கதைகளை எழுதி வருகிறேன். சினிமா பயணம் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.
ரசிகர்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை. ரசிகர்கள், முதலில் தங்கள் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். வேண்டுதல் என்ற பேரில் யாரும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது” என்றிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “ நான் நடித்த எல்லா படங்களும் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விஷயங்களைக் கற்றுத்தந்திருக்கிறது. அதில் மறக்கமுடியாத படம் என்றால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தைச் சொல்வேன்.

அந்தப் படத்தில் இருந்துதான் என் வாழ்க்கை தொடங்கியது. அதன் பிறகு நிறைய இயக்குநர்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்து இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.