டாக்கா: வங்கதேசத்தில் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ், அனைத்து கட்சிகளும் அவருக்கு முழு ஆதரவை வழங்கவில்லை என்றால் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். அதிகாரத்தை தக்கவைக்கும் வகையில் போராட்டத்தை தூண்டுவதற்கான ஒரு சூழ்ச்சியாக யூனுஸின் ராஜினாமா வதந்தி பார்க்கப்படுகிறது.
வேலை இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் தலைமையிலான போராட்டம் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கமாக மாறி, ஆகஸ்ட் 5, 2024 அன்று பிரதமர் ஹசீனா டாக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பதவியை நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஏற்றுக்கொண்டார்.
இந்த சூழலில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான் அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முக்கிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி போராட்டங்களில் குதித்துள்ளது.
இதனையடுத்து அனைத்து தரப்பின் ஆதரவைப் பெறும் தீவிர முயற்சியில், வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டியுள்ளார். இதற்கு எதிராக யூனுஸுக்கு ஆதரவு தெரிவித்து, டாக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், ராணுவ கன்டோன்மென்ட்டுக்கு அணிவகுத்துச் செல்லவும் மாணவர் தலைவர்களும், இளைஞர்களையும் திரட்டும் பணியை தொடங்கியுள்ளனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, பேரணியில் இணைய வேண்டும் என சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை சிலர் தொடங்கியுள்ளனர்.
யூனுஸின் ராஜினாமா குறித்த வதந்திகள், தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று விரும்பும் ராணுவத் தலைவருக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தைத் தொடங்குவதற்கான சூழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை தேர்தல் நடத்தப்பட்டால், அது யூனுஸின் அதிகாரத்துக்கு முடிவுகட்டும் நிலைக்கு கொண்டுசெல்லும்.
கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின் தலைவர்களில் ஒருவரும், மாணவர்களால் தொடங்கப்பட்ட தேசிய மக்கள் கட்சியின் (NCP) ஒருங்கிணைப்பாளருமான நஹித் இஸ்லாம், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் தனது பணியைத் தொடர முடியாததால், முகமது யூனுஸ் ராஜினாமா செய்வதாக மிரட்டியதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் பிணைக் கைதியாக வைக்கப்பட்டுள்ளேன்… என்னால் இப்படி வேலை செய்ய முடியாது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு பொதுவான நிலையை எட்ட முடியாதா?” என்று யூனுஸ் பேசியதாக நஹித் இஸ்லாம் தெரிவித்தார். யூனுஸ் மாணவர் தலைவர்களிடம் மீண்டும் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், வங்கதேசத்தின் ஒரே பெரிய கட்சியான வங்கதேச தேசியக் கட்சி (BNP), தேர்தலில் வெற்றி பெறும் சூழல் உள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே யூனுஸ், மாணவர்களை பயன்படுத்தி போராட்டங்களை தூண்டி தேர்தலை நடத்தாமல் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஜூன் 2026-க்குள் தேர்தல்கள் நடைபெறும் என்று யூனுஸ் கூறியிருந்தாலும், பிஎன்பி உட்பட அரசியல் கட்சிகளிடையே பொறுமையின்மை அதிகரித்து வருகிறது. எனவேதான் வங்கதேச ராணுவத் தலைவர் ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமான், யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
எனவே அதிகாரத்தை தக்கவைக்க ஜூலை பிரகடனத்தைப் பயன்படுத்தி யூனுஸ் ஒரு புதிய குடியரசை அறிவித்து, 1972 அரசியலமைப்பை ரத்து செய்து, ராணுவ ஜெனரல் ஜமானை நீக்கி அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று நிபுணர்களும், விமர்சகர்களும் அச்சம் தெரிவித்துள்ளனர். யூனுஸின் வழிகாட்டுதலில் மாணவர்களும் இளைஞர்களும் வன்முறையில் ஈடுபட முயற்சி செய்யலாம் என்பதை நன்கு அறிந்த ஜெனரல் ஜமான், “மக்களை திரட்டுதல் என்ற பெயரில் வன்முறை மற்றும் குழப்பம் இனி பொறுத்துக்கொள்ளப்படாது” என்று எச்சரித்துள்ளார்