வாஷிங்டன்: தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் போன்ற, தொழிலதிபர் எலான் மஸ்க்கின் நிறுவனங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அதிபர் சிரில் ராமபோசா திட்டமிட்டு உள்ளார். இருப்பினும், தென்ஆப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தவரான மஸ்க், வெள்ளை இன மக்களுக்கு எதிரான கொள்கைகளை அதிபர் ராமபோசா தொடர்கிறார் என்று குற்றச்சாட்டிகூறி வருகிறார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ராமபோசா தொடர்ந்து மறுத்து வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்பை, ராமபோசா நேரில் சந்தித்து பேசினார். உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் இருந்து, அகதிகளாக அமெரிக்காவுக்கு வருகை தருவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தடை விதித்த சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.அப்போது, தென் ஆப்பிரிக்
காவில் வசிக்கும் வெள்ளை இன மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து தென் ஆப்பிரிக்க அதிபரிடம் நேரடியாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டினார். இது தென் ஆப்பிரிக்க அரசை நேரடியாக விமர்சிக்கும் வகையில் இருந்தது.
மேலும், இதுதொடர்பாக ட்ரம்ப் கூறும்போது, “தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இன மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடக்கிறது. அங்கு வெள்ளை இன மக்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். விவசாயிகளாக வேலை பார்க்கும் அவர்களை கொலை செய்கின்றனர் இதைத் தடுக்க அதிபர் ராமபோசா தவறிவிட்டார்” என்றார். ஆனால், அதிபர் டரம்ப்பின் குற்றச்சாட்டை அதிபர் சிரில் ராமபோசா மறுத்தார்.