திருச்சி: பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-வது சதயவிழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு நேற்று பாஜக சார்பில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் அனைத்து தலைவர்களையும் போற்றும் கட்சியாக பாஜக உள்ளது. 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போதே இந்தியா முழுவதும் மறைக்கப்பட்ட அனைத்து தலைவர்களின் வரலாறுகளை ஆவணப்படுத்துவது, அனைத்து தலைவர்களின் புகழ், நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.
விரைவில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அப்போது எந்த இடத்தில் மணிமண்டபம் கட்டினால் பெரும்பிடுகு முத்தரையருக்கு பெருமை சேர்க்குமோ அந்த இடத்தில் அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். மேலும், அடுத்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையருக்கு மத்திய அரசின் சார்பில் இதே இடத்தில் தபால் தலை வெளியிடப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், பா[க மாநில பொருளாளர் சிவசுப்பிரமணியன், திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைவர்களை தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே.கே.செல்வகுமார் வரவேற்றார்.
முன்னதாக, பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை செலுத்தி விட்டு வெளியே வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைவர்கள் வந்ததும் அவர்களுடன் மரியாதை நிமித்தமாக சென்றார்.