சென்னை: திருநங்கைகள் தொடங்கும் தொழிலின் தேவைக்கேற்ப ரூ.50,000/- வரை மானியம், உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கு இலவச கல்வி உட்பட பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, திருநங்கையர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி, அரவாணிகளின் நலனை உறுதி செய்வதற்காக, 15.4.2008 அன்று “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” தொடங்கினார். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் உறுப்பினர்கள் (Official Members), 13 (10 திருநங்கைகள், 1 திருநம்பி, 1 இடைபாலினர் மேலும் 1 பெண் உறுப்பினர்) அலுவல் சாரா உறுப்பினர்களுடன் (Non Official Members) 2025- ஆம் ஆண்டில் திருத்தியமைத்தார்.
திருநங்கைகள் நலவாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருநங்கைகளுக்கான ஓய்வூதியம்: வாழ்வாதாரச் செலவுகளுக்கு வருமானம் ஈட்ட இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அந்த ஓய்வூதியத் தொகையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1,500/- ஆக உயர்த்தி உத்திரவிட்டார்.
இத்திட்டத்தின் கீழ், 2022-2023-ஆம் நிதியாண்டிற்கு 1,311 திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1.53 கோடியும், 2023-2024-ஆம் நிதியாண்டில் 1,482 திருநங்கைகளுக்கு ரூ.2.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1,599 திருநங்கைகளுக்கு 2025 மார்ச் மாதம் வரை ரூ.281.76 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2025-2026-ஆம் நிதியாண்டிற்கு ரூ.3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் 1,760 திருநங்கைகள் பயன்பெற்று வருகின்றனர்.
திருநங்கைகளுக்கான சிறப்பு விருது: முதல்வர் மு.க. ஸ்டாலின், திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கி அறிவித்தார். அதன்படி, தங்கள் சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15-ஆம் நாளன்று “திருநங்கைகளுக்கான சிறப்பு விருது’’ ரூ.1,00,000/-க்கான காசோலை மற்றும் சான்றிதழுடன் வழங்க உத்தரவிட்டார்.
இந்தத் திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டம் கிரேஸ் பானு, விழுப்புரம் மாவட்டம் எ. மர்லிமா, வேலூர் மாவட்டம் பி. ஐஸ்வர்யா, கன்னியாகுமாரி மாவட்டம் சந்தியா தேவி, நாமக்கல் மாவட்டம் ரேவதி, தூத்துக்குடி மாவட்டம் பொன்னி ஆகிய திருநங்கைகள் சிறப்பு விருதுகளைப் பெற்றுள்ளனர்.
சுயதொழில் மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பொருளாதார ரீதியாக உயர்த்தி, சமுகத்தில் அவர்களுக்கு அங்கீகாரத்தினை வழங்கும் நோக்கத்துடன், அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க மானிய வழங்கும் திட்டத்தினை உருவாக்கினார்கள். அதன் மூலம் அவர்கள் தொடங்கும் தொழிலின் தேவைக்கேற்ப ரூ.50,000/- வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2021 ஒவ்வொரு ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 811 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.
திருநங்கைகளுக்கான கல்விக் கனவு திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின், திருநங்கைகளும் மற்றவர்களைப் போன்றே சமமாக உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் விதமாக 2024-2025-ஆம் நிதியாண்டு முதல் உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கான கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் உட்பட அனைத்துச் செலவினங்களையும் வாரியத்தின் மூலம் வழங்கிட உத்தரவிட்டார். இத்திட்டத்திற்கென 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணத் தொகை திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் செலுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.