திண்டுக்கல்: பருவமழை தொடங்கியதால் முன்னெச்சரிக்கையாக கொடைக்கானலுக்கு (இன்று) ஞாயிற்றுக் கிழமை பேரிடர் மீட்புக் குழுவினர் வருகை தந்தனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்னதாகவே துவங்கியுள்ளது. இதையடுத்து ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமாக கனமழை பெய்யும் பகுதியான கொடைக்கானல் மலைப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று கொடைக்கானல் வருகை தந்தனர்.
கடந்த சில தினங்களாகவே கொடைக்கானலில் சாரல் மழை பெய்யத் துவங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது கனமழையாக மாற வாய்ப்புள்ளதால் பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பணிக்கு தேவையான கருவிகளையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
மலைச் சாலையில் மரங்கள் சாய்ந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். கொடைக்கானலுக்கு வருகை புரிந்துள்ள 25 பேர் அடங்கிய மீட்புக் குழுவினர் 24 மணி நேரமும் மலைப் பகுதிகளில் மழையால் ஏற்படும் பாதிப்புக்களை கண்காணித்து, மழையால் ஏற்படும் இயற்கை பேரிடர்களை உடனுக்குடன் சீர் செய்ய உள்ளனர். கொடைக்கானல் வட்டாட்சியர் பாபு, பேரிடர் மீட்புக்குழுவினருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார்.