கோவை: எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடும் கட்சிதான் திமுக என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தமிழகத்துக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் கூறி, நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துவந்தார்.
அந்த மூன்று ஆண்டுகாலம் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்று இருக்கலாம். புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று இருக்கிறது. அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தி, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனால் பயந்து, டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, பிரதமர் தமிழகத்துக்கு வந்தபோது கருப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்த பிறகு, ஸ்டாலின் அதே பிரதமருக்கு வெள்ளைக் கொடி பிடித்தார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடும் கட்சிதான் திமுக. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலுசாமி, எம்எல்ஏ-க்கள் ஜெயராம், அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் உடனிருந்தனர்.