மதுரை: மருத்துவர்களை மரியாதைக் குறைவாகப் பேசும் மாவட்ட சுகாதார அலுவலரின் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அவரது ஆய்வுக் கூட்டங்களைப் புறக்கணிக்கவும், போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன் சமீபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பங்கேற்ற காணொலி ஆய்வுக் கூட்டத்தில் பேசும்போது மருத்துவர்களை மரியாதைக் குறைவாகவும், அநாகரிகமாகவும் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த மருத்துவர்கள், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திடமும், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநரிடமும் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை பொது சுகாதார இணை இயக்குநர், டாக்டர் குமரகுருபனிடம் விசாரணை நடத்தினார். ஆனால், அவர் தான் நேர்மையாகப் பணியாற்றி வேலை வாங்குவதால் அவர்கள் தேவையில்லாமல் தன் மீது பழி சுமத்துவதாகத் தெரிவித்தார். இந்த விசாரணை ஒரு புறம் நடந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் காணொலி மூலம் இன்று நடந்தது.
அதில் மருத்துவர்களை மரியாதைக் குறைவாகப் பேசிய மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன் மீது நடவடிக்கை எடுக்கவும், அதுவரை அவர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களைப் புறக்கணிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் சுகாதாரத் துறை மற்றும் அரசு மருத்துவர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இக்கூட்டம் குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க பொது சுகாதாரத் துறை பிரிவுச் செயலாளர் விசுவநாதபிரபு அறிக்கையில், “மருத்துவர்களை மரியாதையின்றி ஆணவத்துடன் பேசும் குமரகுருபரன் போன்ற நாகரிகமற்ற சுகாதார அலுவலருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இயக்குநருக்கும், அரசுக்கும் சங்கம் முன்வைக்கிறது. ஏற்கெனவே இயக்குநர் விசாரணை நடத்தி இருக்கும் வேளையில் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று சங்கம் நம்புகிறது.
இது போன்று நடக்காமல் தவிர்க்கும் பொருட்டு `குமரகுருபரன் புறக்கணிப்பு’ போராட்டம் நடத்த பொதுக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி அவர் நடத்தும் அனைத்துக் கூட்டங்களையும் புறக்கணித்தல், அவருடைய அலுவலக வாட்ஸ் அப் குரூப்-களைவிட்டு வெளியேறுதல், அவரது அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை தவிர்த்தல். நிர்வாகப் பணிகளை மாவட்டத்தில் இருந்து சர்குலராக மட்டும் பெற்று நிறைவேற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது,
இந்தப் போராட்டங்களால் நோயாளிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது . இந்த தீர்மானங்கள் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் வரை கடைப்பிடிக்கப்படும். தேவைப்பட்டால் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவது குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும், என அதில் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரனின் கருத்தை அறிய பலமுறை முயற்சி செய்தும் அவர் அழைப்பை ஏற்கவில்லை.
‘நேர்மையான அதிகாரி’ – இது குறித்து அரசு மருத்துவர்கள் சிலர் கூறும்போது “பணியில் நேர்மையானர். கண்டிப்பானவர். வீடியோவில் அவரது பேச்சு தரம் தாழ்ந்து இருந்திருக்கலாம். அது தவறானதுதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அனுப்பலாம். சுகாதாரத் துறையில் நல்ல அனுபவம் மிக்க அதிகாரியான அவரது ஆலோசனையில், மிகச் சிறப்பான சுகாதாரத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளன. பணியில் கண்டிப்பும், நேர்மையும் இருக்கும் அதிகாரிகளை அரசுதான் காப்பாற்ற வேண்டும்” என்றனர்.