‘ஆபரேஷன் சிந்தூர்’ கருத்துப் பதிவுக்காக மாணவி கைது: மகாராஷ்டிர அரசை கண்டித்த ஐகோர்ட் கூறியது என்ன?

மும்பை: இந்தியா – பாகிஸ்தான் விரோதப் போக்கு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக புனேவைச் சேர்ந்த 19 வயது பெண்ணை கைது செய்ததற்காக மகாராஷ்டிர அரசை அம்மாநில உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. மேலும், அதன் பின்விளைவுகள் தீவிரமானது என்றும் சாடியுள்ளது.

நீதிபதிகள் கவுரி கோட்சே மற்றும் சோமசேகர் சுந்தரேஷன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு, மாணவியின் வழக்கறிஞரை உடனடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டு, ஜாமீன் இன்றே வழங்கப்படும் என்றும் தெரிவித்தது. மேலும், மாநில அரசின் இந்தத் தீவிரமான எதிர்வினை தேவையில்லாதது என்றும், மாணவி ஒருவரைக் குற்றவாளியாக்கியுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்தது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் விரோதப் போக்கு குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதற்காக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த மாணவி தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். அவர் தனது கல்லூரி தன்னை கல்லூரியில் இருந்து நீக்கியதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு, “அந்தப் பெண் ஏதோ ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பின்பு தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அவருக்கு ஒரு வாய்ப்பளிப்பதற்கு பதிலாக மாநில அரசு மாணவியை கைது செய்து, அவரைக் குற்றவாளியாக்கியுள்ளது. ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார். அவருடைய வாழ்க்கையை நீங்கள் இப்படிதான் அழிப்பீர்களா? ஒரு மாணவியின் வாழ்க்கை பாழாகிவிட்டது” என்று தெரிவித்தது.

அப்போது, அரசு கூடுதல் வழக்கறிஞர் ககாடே, “மாணவியின் செயல் தேச நலனுக்கு விரோதமானது” என்று கூறினார். அப்போது நீதிபதிகள் அமர்வு, “தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட மாணவியின் பதிவால் தேச நலன் பாதிக்கப்படாது. ஒரு மாணவியை அரசு எப்படி இவ்வாறு கைது செய்ய முடியும்? மாணவர்கள் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதை நிறுத்த அரசு விரும்புகிறதா? அரசின் இந்தத் தீவிரமான எதிர்வினை அந்நபரை மேலும் தீவிரமாக்கும்” என்று தெரிவித்தது.

மாணவியின் வழக்கறிஞர் ஃப்ரகானா ஷா, திங்கள்கிழமை மாணவியின் மனுவை அவசரமாக விசாரிக்க கோரியிருந்தார். மாணவிக்கு தற்போது பருவத்தேர்வு நடந்து வருவதால் அவரின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். வழக்கு விசாரணையின்போது கல்லூரி தரப்பு வழக்கறிஞர், மாணவி போலீஸ் பாதுகாப்புடன் தனது தேர்வினை எழுதலாம் என்று தெரிவித்தார். இந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றம், “மாணவி குற்றவாளி இல்லை” என்று தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து மாநில அரசை கடுமையாக சாடிய நீதிபதி, “ஒரு கல்வி நிறுவனத்தின் நோக்கம் என்ன? வெறும் கல்வியை போதிப்பது மட்டும் தானா? நீங்கள் ஒரு மாணவரை சீர்திருத்த விரும்புகிறீர்களா அல்லது குற்றவாளியாக்க விரும்புகிறீர்களா?

நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க விரும்புவது புரிகிறது. ஆனால், மாணவி தேர்வெழுதுவதை தடுக்க முடியாது. மீதமுள்ள மூன்று தேர்வுகளை எழுத அவரை விடுங்கள். மாணவி தேர்வெழுதுவதைத் தடுக்க முடியாது. போலீஸ் பாதுகாப்புடன் அவரை தேர்வெழுதுமாறு கேட்க முடியாது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, மே 7-ம் தேதி பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவினை இரண்டு மணிநேரத்தில் நீக்கிவிட்டதாக மாணவி தனது மனுவில் தெரிவித்திருந்தார். தனது பதிவு காரணமாக மாணவி 9-ம் தேதி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.