திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வக்கம் பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (வயது 55). இவரது மனைவி சிஜா (வயது 50). இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 25), ஆகாஷ் (வயது 22) என 2 மகன்கள் இருந்தனர். அனில் குமார் அப்பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அனில் குமார், மனைவி சிஜா, மகன்கள் அஸ்வின் , ஆகாஷ் என குடும்பத்தினர் 4 பேரும் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, வீட்டில் உள்ள அறையில் குடும்பத்தினர் 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.