‘நோபலுக்கு ட்ரம்ப் பெயரை பரிந்துரை செய்ததை திரும்ப பெறுக’ – பாகிஸ்தானில் வலுக்கும் குரல்கள்

இஸ்லாமாபாத்: ஈரானின் 3 அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்ததைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெயரை பரிந்துரைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசுக்கு அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது மேற்கொண்ட அமைதிக்கான முயற்சிகள் காரணமாக, அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புக்கு வழங்க பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் கையெழுத்திட்ட இதற்கான பரிந்துரைக் கடிதம் ஏற்கெனவே நார்வேயில் உள்ள நோபல் அமைதி பரிசுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய 3 அணுசக்தி தளங்களை தாக்குதல் நடத்தி அமெரிக்கா முற்றிலுமாக அழித்துள்ளதை, ட்ரம்புக்கான நோபல் பரிந்துரை மீது பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாகிஸ்தானின் ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (JUI-F) அமைப்பின் தலைவரும், மூத்த அரசியல்வாதியுமான மவுலானா ஃபஸ்லூர் ரெஹ்மான், பாகிஸ்தான் அரசு தனது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “ட்ரம்ப்பின் அமைதிக்கான வாக்குறுதி தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நோபல் பரிசுக்கான பரிந்துரையை அரசு திரும்பப் பெற வேண்டும்.

ட்ரம்ப் உடனான பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீரின் சமீபத்திய சந்திப்பு மற்றும் மதிய உணவு விருந்து ஆகியவை பாகிஸ்தான் ஆட்சியாளர்களை மிகவும் மகிழ்வித்தது. எனவே, அவர்கள் அமெரிக்க அதிபரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தனர். பாலஸ்தீனம், சிரியா, லெபனான் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ட்ரம்ப் ஆதரித்துள்ளார். இது எப்படி அமைதிக்கான அடையாளமாக இருக்க முடியும்? அமெரிக்காவின் கைகளில் ஆப்கானியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களின் ரத்தம் படிந்திருக்கும் நிலையில், அவர் எப்படி அமைதியை ஆதரிப்பவர் என்று கூற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதேபோல், பாகிஸ்தான் முன்னாள் செனட்டர் முஷாஹித் ஹுசைன் கூறும்போது, “ட்ரம்ப் இனி உண்மையான சமாதானத் தூதர் அல்ல. மாறாக, வேண்டுமென்றே ஒரு சட்டவிரோதப் போரை கட்டவிழ்த்துவிட்ட ஒரு தலைவர் என்பதால், பாகிஸ்தான் அரசு இப்போது அவரது நோபல் பரிந்துரையை மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய போர் லாபியால் ட்ரம்ப் சிக்க வைக்கப்பட்டது மிகப் பெரிய தவறு. ட்ரம்ப் இப்போது அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்” என்றார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நாடாளுமன்ற உறுப்பினர் அலி முகமது கான், “ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் மற்றும் காசாவில் இஸ்ரேலிய படுகொலைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கிறது. எனவே பாகிஸ்தான் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்றார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் அரசியல் சிந்தனைக் குழுவின் தலைவர் ரவூப் ஹசன், “இந்த விருதுக்கு ட்ரம்பை பரிந்துரை செய்வதில் முக்கியப் பங்கு வகித்தவர்களுக்கு முழுமையான அவமானம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இடையே பதற்றத்தைத் தணிக்க உதவிய எனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள். எனக்கு இதுவரை 4 அல்லது 5 முறை நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு தரமாட்டார்கள், தாராளவாதிகளுக்குத்தான் தருவார்கள்” என்று குறிப்பிட்டிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.