புதுடெல்லி: ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கான முன்மொழிவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கூடவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது முன்னர் திட்டமிட்டதை விட ஒரு வாரம் அதிகமாகும். முன்னதாக, இந்தக் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 12-ம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் இப்போது அது ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுதந்திர தின கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கூட்டத்தொடர் நடைபெறாது என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
முக்கிய சட்டங்களை கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடர் கூடுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள முக்கிய மசோதாக்களில் அணுசக்தி துறையில் தனியார் நுழைவதை எளிதாக்கும் சட்டமும் அடங்கும்.
அதேபோல, ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. மேலும், இந்தியா – பாகிஸ்தான் மோதலில் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றன. இந்த விவகாரங்களை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப திட்டமிட்டுள்ளன.