சென்னை: கோயில் காவலாளி அஜித்குமாரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? என அரசியல் தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இதில், அவரை சித்ரவதை செய்ய உத்தரவிட்ட அதிகாரி யார்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
நயினார் நாகேந்திரன்: அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கெனவே 2011-ம் ஆண்டு அன்றைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய நேரடி உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற மோசடி வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கும் திமுக.வின் உயர் மட்டத் தலைமைக்கும் தொடர்புகள் இருந்ததால்தான் தனிப்படை அமைத்து அஜித்குமாரை அடித்தும், துன்புறுத்தியும் விசாரிக்க உடனடி ஆணை பிறப்பிக்கப்பட்டதா?
அஜித்குமாரை காவலர்கள் துன்புறுத்துவதை படம் பிடித்த முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். யார் இவரை அச்சுறுத்துகிறார்கள்? எப்ஃஐஆர் பதிவு செய்யாமலேயே தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்த அதிகாரியைப் பற்றிய தகவல்களை அரசு இன்னும் வெளியிடாதது ஏன்?
அன்புமணி: திருப்புவனத்தில் காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்புகொண்டு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டாலும், தமிழகக் காவல்துறையை சீர்திருத்த, இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.