சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர், ஜெகன், விஜயமூர்த்தி, சுதாகர் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 30-ம் தேதி சென்றனர்.
சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 58 கடல் மைல் தொலைவில் கடந்த 1-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்று வேகமாக வீசியுள்ளது. கடலடி நீரோட்டமும் வேகமாக இருந்துள்ளது. இதனால், படகில் இருந்து வலையோடு கடலுக்குள் வீசப்பட்டிருந்த கயிறு பாறையில் சிக்கி உள்ளது.
ஒரு கட்டத்தில் நீரோட்டம் மிகவும் வேகமாக இருந்ததால் படகு பாறை மீது மோதி கவிழ்ந்தது. உடனே படகில் இருந்த 6 பேரும் கடலில் குதித்தனர். பின்னர், மிதவை மூலம் கரையை நோக்கி புறப்பட்டனர். ஆனால் ராஜாவும், மாசிலாமணியும் கடலில் நீந்த முடியாமல், அங்கேயே சிக்கிக் கொண்டனர். மீதி 4 பேரும் கடலில் நீந்தி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையேறினர்.
சென்னை வந்த 4 பேரும், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில், கடலில் காணாமல் போன மீனவர்கள் ராஜா, மாசிலாமணியை கடலோர காவல் படையினர் உதவியுடன் போலீஸார் தேடி வருகின்றனர்.