Atal Pension Yojana : அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அடல் ஓய்வூதிய யோஜனா திட்டத்தை 2015-16 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் 60 வயதிற்குப் பிறகு பயனாளிகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது. பயனாளிகள் இறக்கும் வரை ஓய்வூதியத்தைப் பெறலாம். ஓய்வூதியத் தொகை APY திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் செலுத்தும் பங்களிப்பைப் பொறுத்தது. சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரும் ஓய்வூதியப் பலன்களைப் பெறலாம். APY திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. இது ஒரு தன்னார்வ பங்களிப்புத் திட்டமாகும்.
அடல் ஓய்வூதியத் திட்டம்: சலுகைகள்
இந்தத் திட்டம் அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு, அவர்களின் ஓய்வு ஆண்டுகளில் நிதிப் பாதுகாப்பை வழங்க உருவாக்கப்பட்டது. APY திட்டத்தின் சந்தாதாரர்களுக்கு மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மத்திய அரசு உத்தரவாதம் செய்கிறது. சந்தாதாரரின் மறைவுக்குப் பிறகு, மனைவியும் இறக்கும் வரை ஓய்வூதியத்தைப் பெறலாம். சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரும் இறந்த பிறகு, சந்தாதாரரின் 60 வயது வரை திரட்டப்பட்ட ஓய்வூதிய நிதியை, அவர்கள் நாமினியா போட்டவர்கள் பெறலாம்.
தகுதி
18 மற்றும் 40 வயதுக்குட்பட்ட அனைத்து இந்திய குடிமக்களும் APY திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அவர்கள் தங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குடன் செயலில் உள்ள மொபைல் எண்ணையும் வைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டம் தனிநபர்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு APYக்கு பங்களிக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவர்கள் APY திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் முறை
இந்த திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் வங்கி கிளைகளில் இருந்து சேர்க்கை படிவத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். PFRDA செயலி வழியாகவும் அடல் ஓய்வூதிய யோஜனாவிற்கு விண்ணப்பிக்கலாம். படிவத்திற்குள் தேவையான விவரங்களை நிரப்பிய பிறகு, ஆதார் அட்டையின் நகலோடு அதை வங்கியில் சமர்ப்பிக்கவும். APY படிவம் பல்வேறு பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன் SMS மூலம் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறலாம்.
APY திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?
– வங்கியின் கிளை அல்லது தபால் நிலையத்திலிருந்து APY பதிவு படிவத்தை பெறவும்
– வங்கிக் கணக்கு அல்லது தபால் நிலைய சேமிப்புக் கணக்கு விவரங்களுடன் தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளிடவும். நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது தபால் நிலையத்தில் படிவத்தை நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.
– படிவத்தை சமர்ப்பிக்கும் முன், உங்கள் முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் வயது, உங்கள் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை நிரப்புவதை உறுதிசெய்யவும்.
– அனைத்து விண்ணப்பதாரர்களும் ஒரு நாமினியை நியமித்து அவர்களுடனான உறவைக் குறிப்பிட வேண்டும்.
– 60 வயதுக்குப் பிறகு பெற விரும்பும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையைக் குறிப்பிடவும்.
– படிவத்தின் இறுதியில் தேதி மற்றும் இருப்பிடத்தை உள்ளிட்டு, APY இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதை சான்றளிக்க கையொப்பம் அல்லது கட்டைவிரல் ரேகையை வைக்கவும்.
– அனைத்து பயனாளிகளும் NPS வலைத்தளம் மூலம் ஆன்லைனில் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: https://npstrust.org.in/open-apy-account.
மாதாந்திர பங்களிப்புகளின் அடிப்படையில் ஓய்வூதியத் தொகையின் மதிப்பீட்டைப் பெற ஆன்லைன் APY கால்குலேட்டர் உதவுகிறது. பதிவு செய்யும் நேரத்தில் சந்தாதாரரின் வயதைப் பொறுத்து மாதாந்திர பங்களிப்புத் தொகை மாறுபடும். APY திட்டத்தின் கீழ் 18 வயதில் சேருபவர்களுக்கு மாதாந்திர பங்களிப்புகள் ரூ.42 இல் இருந்து தொடங்குகின்றன.
உதாரணமாக, ஒரு உறுப்பினர் 18 வயதில் சேர்ந்தால், ரூ.5,000 மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தேவையான பங்களிப்பு மாதத்திற்கு ரூ.210 ஆகும். 60 வயது வரை, பயனாளி 42 ஆண்டுகளுக்கு இந்தத் தொகையைச் செலுத்த வேண்டும். மொத்த முதலீடு ரூ.1,05,840 ஆகவும், கார்பஸ் நிதி ரூ.7,54,097 ஆகவும் வளரும்.