Online Loan Traps, RBI Rules : கடன் பலரின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. உடனடி தேவை வரும்போது உறவினர்கள் நண்பர்கள் என்று கடன் வாங்குவதற்கு முயற்சிப்போம். கிடைக்கவில்லை எனில் கந்து வட்டி என்ற கொடுமைக்குள் சிக்கித்தவித்த பல கதை உண்டு. இன்று பெரும்பாலும் அக்கொடுமைகள் அரசின் சீரிய முயற்சியால் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கடன் செயலி என்ற பெயரில் கந்து வட்டிக் கொடுமைகளைத் தாண்டி பெருங்கொடுமை நிகழ்கிறது. கடன் வாங்கும் செயலியின் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. பல நேரங்களில் உறவினர்களுக்கும், கடன் வாங்கியவர்களுக்குமே, கடன் பெற்றவர்களின் அந்தரங்க புகைப்படம் வந்ததுண்டு.
இதுபோல் உளவியியல் தாக்குதல் தாங்க முடியாமல், சத்தமில்லாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஏராளம். இப்படியான சூழலுக்கு உள்ளாகாமல் இருக்க இந்த கடன் செயலிகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது ஒருவருக்கு மட்டும் நடப்பது அல்ல, நாடு முழுவதும் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். செயலி மூலம் கடன் வாங்குபவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. கூட இருப்பவர்களே கடன் தர முன் வராதபோது, முன்பின் தெரியாத யாரும் கடன் தரப்போவதில்லை. அப்படி இருக்க எங்கேயோ இருக்கும் செயலி நடத்தும் ஒருவன் எதை நம்பித் தருவான்?.
இந்த கேள்வியை பணம் தேவைப்படும் நேரத்தில் யாரும் யோசிப்பத்தில்லை, கேட்டுக்கொள்வதும் இல்லை. மிக அதிக வட்டி என்றாலும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்போது அவர்களிடம் இருக்கும் மனநிலை என்னவென்றால், எவனோ தரப் போறான். திருப்பி கட்டலனா என்ன பண்ணிட முடியும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் இப்படி நினைத்து வாங்கி சிக்கியவர்கள் பலருண்டு. சரி கேட்குற பணத்த கொடுத்தா முடியும் என்று நினைத்தால் அதுவும் முடியாது. வாங்கியதைவிட வட்டி அதிகமாகக் கட்டினாலும் மேலும் கடன் உள்ளது என்று மீண்டும் மிரட்டல் அழைப்புகள் வரும்.
குறிப்பாக, உங்களிடன் உறவினர்கள், நண்பர்களுக்கு எல்லாம் நீங்கள் கடன் வாங்கிய தகவல் செல்லும். கடன் வாங்கிய உங்களின் நண்பர்கள் உறவினர்களின் எண்களும், புகைப்படமும் எப்படி அவர்களுக்கு கிடைகிறது என்று சிந்தித்துள்ளீர்களா? கடன் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் உங்களின் அலைபேசி எண், அடையாள அட்டை எல்லாம் சமர்ப்பித்து அடுத்தபடியாக உங்கள் புகைப்படம், கேமரா, சேமிப்பிடம் (Gallery), தொடர்பு எண்கள், ரெக்கார்டர், இருப்பிடம், வங்கி கணக்கு விவரம் என்று அனைத்தையும் பார்ப்பதற்குப் பயன்படுத்துவதற்கு நீங்கள் தான் அனுமதி தருகிறீர்கள்.
அப்படிதான் நமது மொபைலில் இருக்கும் தகவல்கள் அவர்களுக்கு தெரிய வருகிறது. நீங்கள் கடனை முழுமையாக கட்டி அந்த செயலியை மொபைலில் இருந்து நீக்கினாலும் உங்களின் தகவல்களை அவர்கள் சேமித்து வைத்திருப்பார்கள். முன் பின் தெரியாதவன் எதை வைத்துக் கடன் தருகிறான் என்றால், உங்கள் தகவல்களை நம்பியே. புகைப்படம், உங்கள் பெயர், நண்பர்கள், உறவினர்கள் எண் இது போதும். இதை வைத்து உங்களை பற்றி உங்கள் நண்பர்களுக்கு என்ன வேண்டுமானாலும் அனுப்ப முடியும் தானே? இதுவே அவர்களின் மூலதனம்.
முதலில் குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? இந்த செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்’ என்று விளம்பர நிறுவனங்கள் மூலமாக குறுஞ்செய்திகளை அனுப்புவார்கள். அப்போது, யாருக்கெல்லாம் பணத் தேவை இருக்கிறதோ அவர்கள் இதை பதிவிறக்கம் செய்து இவர்களின் வலையில் விழுகிறார்கள். ‘பணத் தேவை எப்போதும் இருக்குமே எங்கும் கடன் வாங்காமல் எப்படி சமாளிப்பது என நீங்கள் கேட்டால் மொபைல் செயலி மூலம் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே பணத் தேவை இருந்தால் குறைந்தபட்சம் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட Non-Banking Financial Company’ சான்றிதழ் பெற்ற மொபைல் செயலிகள் இருக்கின்றன. அதில் வாங்கலாம்.
இந்திய அரசு நிர்ணயித்த வட்டி சதவீதம் தான் இவர்களும் வசூலிப்பார்கள். ஒரு வேளை, நீங்கள் கடன் வாங்கி அதை திரும்ப கேட்க உங்களிடம் ஆபாசமாக பேசினாலோ புகைப்படங்களை பிறருக்கு அனுப்பினாலோ காவல்துறையில் புகார் அளியுங்கள், தைரியமாக அந்த மிரட்டல்களை எதிர்கொள்ளுங்கள். நாம் கடன் தான் வாங்கினோமே தவிர, நம்மையும் நமது தன்மானத்தையும் அவர்களிடம் அடகு வைக்கவில்லை.
கடன் செயலிகளின் வலையில் விழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
* கடன் செயலிகளில் கடன் வாங்காமல் இருக்க வேண்டும்.
* அப்படியே வாங்க நினைத்தால், நீங்கள் பதிவிறக்கம் செய்த செயலி ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெற்றதா என்று பாருங்கள்.
* NBFC சான்றிதழ் இருக்க வேண்டும்.
* உங்கள் கேமரா, புகைப்பட சேமிப்பிடம், தொடர்பு எண்கள், ஆவணங்கள், இருப்பிடம், ரெக்கார்டர், போன்ற தேவையற்ற தரவுகளுக்கு அந்த செயலி அனுமதி கேட்க கூடாது, நீங்களும் அனுமதி கொடுக்கக்கூடாது.