திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (ஜூலை 9) நடைபெற உள்ள பொது வேலை நிறுத்த போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநாடு ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை சேலத்தில் நடைபெறுகிறது. மாநாட்டின் 2-ம் நாள் நிகழ்ச்சியில் முதல்வரும், தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 9-ம் தேதி (நாளை) அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
பாஜக என்ற எலிப்பொறியில்… பாஜகவுடன் கூட்டணி வைத்ததை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், தங்கள் கட்சித் தொண்டர்களிடமிருந்தும், பாஜகவிடமிருந்தும் தன்னை காத்துக்கொள்ளவே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் பாஜக என்கிற எலிப்பொறியில் மாட்டிக்கொண்டு மீள முடியாமல் உள்ளார்.
திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால் எங்கள் கூட்ட ணியில் எந்த சலசலப்பும் இல்லை. எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது. திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து பேச்சுவார்த்தையின்போது முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.