பிரேசிலியா,
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பின் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார். 57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
3 நாடுகள் சுற்றுப்பயணத்திற்கு பின்னர், பிரேசில் நாட்டில் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் கடந்த 6-ந்தேதி அதிகாலை அந்நாட்டுக்கு சென்றார். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரை சென்றடைந்த அவர், அதன்பின், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, 21-ம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் உலகளாவிய தெற்கு பகுதியானது விளிம்பு நிலையில் உள்ளது என சுட்டி காட்டி பேசினார். அதனால், சர்வதேச அமைப்புகளில் விரிவான சீர்திருத்தங்களுக்கான அவசர தேவையையும் அவர் சுட்டி காட்டினார்.
இதேபோன்று இரட்டை நிலைப்பாடுகளால் உலகளாவிய தெற்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிக்கான நலன்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை அளிக்கப்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், கியூபா நாட்டின் ஜனாதிபதி மிகுவேல் டையஸ்-கேனல் ஆகியோரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். அவர்களின் பேச்சுவார்த்தையின்போது, மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர், வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிற அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு அவர் இன்று காலை சென்றார். அவரை, பிரேசிலின் பாதுகாப்பு துறை மந்திரி ஜோஸ் முசியோ மான்டீரோ பில்ஹோ விமான நிலையத்தில் வரவேற்றார். அப்போது, சம்பா ரெக்கே என்ற அந்நாட்டின் பாரம்பரிய நிகழ்ச்சியை நடத்தி பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், பிரேசிலியாவில் உள்ள ஓட்டலுக்கு அவர் சென்றார். அப்போது அவரை இந்திய வம்சாவளியை சேர்ந்த குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினரும் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தியபடி வரவேற்றனர். அவரை வரவேற்க காத்திருந்த குழந்தைகளிடம் அவர் சிறிது நேரம் உரையாடினார்.
இதேபோன்று, ஓட்டலில் அவருடைய வருகையையொட்டி கலாசார நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. அவர்களின் நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர்களிடம் பிரதமர் மோடி உரையாடினார். ஓட்டலில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும், இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.