புதுடெல்லி: 2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், லடாக் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் சுயமாக பங்கேற்கலாம் என்றும் அதற்காக விரைவில் இணையதளம் தொடங்கப்படும் என்றும் மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது: முதலாவது டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாகும் இது. இதில் பங்கேற்கவுள்ள கணக்கெடுப்பாளர்கள் ஆன்டிராய்ட், ஆப்பிள் போன்கள் வழியாக தகவலைத் திரட்டுவர். மேலும், இதில் சுயமாக மக்கள் பங்கேற்று தங்களது விவரங்களை தெரிவிக்க இந்த புதிய இணையதளம் உதவும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பை நவீனப்படுத்துவதற்காகவே டிஜிட்டல் கணக்கெடுப்பு திட்டத்தைத் தொடங்கவுள்ளோம். முதல்முறையாக டிஜிட்டல் முறையில் தகவல்களைத் திரட்டி, அதை மத்திய சர்வருக்கு எடுத்துச் செல்லவுள்ளோம். மக்கள் சுயமாக கணக்கெடுப்பில் பங்கேற்பதற்காக விரைவில் தனி இணையதளத்தை மத்திய அரசு தொடங்கவுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.