சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்று இந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
இம்மாதம் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்பதற்காகத் தகுதி பெற்றுள்ளதுடன், கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்றதற்குத் தேவையான பயணச் செலவை தமிழ்நாடு அரசு முழுமையாக வழங்கிய நிலையில் நடப்பாண்டில் அரசுக்குக் கோரிக்கை வழங்கியும், இதுவரை அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வராமல் உள்ளது.
இன்னும் இரு வாரங்களில் போட்டிக்குப் புறப்பட்டுச் செல்ல வேண்டிய நிலையில், தமிழக அரசு விரைவாக பயணச் செலவை வழங்க வேண்டும் என்பது பாரா வீரர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.

கைகள் இழந்த நிலையில் கே-44 பிரிவில் இருவரும், உடலுறுப்புச் சவாலுடையோருக்கான பும்சே எனப்படும் உடல் திறனை வெளிப்படுத்தும் பிரிவில் 6 பேரும் என மொத்தம் 8 பேர் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தங்களுக்கு நேரிட்ட உடல் பாதிப்பைப் பொருட்படுத்தாமல், மிகவும் ஏழ்மை நிலையிலும், தங்களை நிலைநிறுத்திக் கொள்ள, விடாமல் போராடும் இந்த வீரர்கள் கடந்த முறை 7 பிரிவுகளில் பதக்கங்களை வென்றனர்.
இந்த முறையும் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அதற்கான சூழலை தமிழ்நாடு அரசு வெகு விரைவில் ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.