காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: கார்கே

புவனேஸ்வர்: நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மல்லிகார்ஜுன கார்கே, “மத்தியிலும் ஒடிசாவிலும் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, ​​இங்கு பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. என்டிபிசி, நால்கோ, பாரதீப் துறைமுகம், ஹிராகுட் அணை, ரூர்கேலா எஃகு ஆலை, சில்கா கடற்படை அகாடமி, மஞ்சேஸ்வரில் ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகியவை காங்கிரஸ் அரசு ஒடிசாவுக்குச் செய்த திட்டங்களில் முக்கியமானவை.

நேரு பிரதமராக இருந்தபோதுதான், புவனேஸ்வர் தலைநகராக மாற்றப்பட்டது. ஒடிசா மக்களுக்கு நரேந்திர மோடி என்ன செய்துள்ளார்? ஒடிசாவுக்கு பாஜகவின் பங்களிப்பு பூஜ்ஜியம். காங்கிரஸ் ஒடிசா மக்களுக்காக உழைத்தது. அதனால்தான் இன்று பல பெரிய பொதுத் துறை நிறுவனங்கள் ஒடிசாவுக்கு கிடைத்துள்ளன. ஆனால், நரேந்திர மோடி எதையும் செய்யவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சி உருவாக்கியதையும், மக்கள் கட்டியெழுப்பியதையும் மோடி விற்றுக்கொண்டிருக்கிறார்.

விமான நிலையங்கள், சுரங்கங்கள், காடுகள், நிலம், நீர் என அனைத்தும் தனியாருக்கு விற்கப்படுகின்றன. பணிகளைச் செய்து அதன் பலன்களைக் காட்டியவர்கள் நாங்கள். ஒடிசாவின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் காங்கிரஸ் எண்ணற்ற பணிகளைச் செய்துள்ளது. காங்கிரஸ் நாட்டில் 160 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியது. அவற்றில் 23 பொதுத் துறை நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது. நரேந்திர மோடி இதைத்தான் செய்கிறார். அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம். ஒடிசா மக்கள் காங்கிரஸை வெற்றி பெறச் செய்தால், நாடு முழுவதும் காங்கிரஸ் அரசு அமையும்.

நாட்டின் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்பதே நரேந்திர மோடியின் திட்டம். பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள். அரசியலமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டால், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும். மகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் திருடர்களின் அரசாங்கம். அதையே பிஹாரிலும் செய்ய அவர்கள் முயல்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. எனவே, அவர்களை நாம் அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்.

அரசியலமைப்பிலிருந்து ‘மதச்சார்பின்மை’ மற்றும் ‘சோசலிசம்’ என்ற வார்த்தைகளை நீக்க பாஜக விரும்புகிறது. ஆனால், மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகள் அவர்களின் கட்சி அரசியலமைப்பில் உள்ளன. 1980-ஆம் ஆண்டு, பாஜக தனது கட்சியின் அரசியலமைப்பை உருவாக்கியது. அதில் நாட்டின் அரசியலமைப்பில் எழுதப்பட்டதைப் பின்பற்றுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவர்கள் அப்படி இருக்கவில்லை.

அரசியலமைப்புக்கு எதிரான கருத்துகளை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அனைத்து இடங்களிலும் கூறுகின்றன. எனவே, இளைஞர்கள் எழுந்து நின்று அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பைக் காப்பாற்றவும், நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கவும், மக்களுக்கு நீதி கிடைக்கவும் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடந்தே சென்றார். இந்த முயற்சியில் நீங்கள் சேரவில்லை என்றால், நாம் அனைவரும் இழப்பைச் சந்திப்போம், பாஜகவுக்கு எந்த இழப்பும் ஏற்படாது.

ராகுல் காந்தி மணிப்பூருக்கு செல்கிறார். ஆனால், நரேந்திர மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. அவர் வெளிநாடுகளுக்குச் செல்கிறார், ஆனால் மணிப்பூருக்குச் செல்லவில்லை. இத்தனைக்கும் மணிப்பூரில் வீடுகள் எரிக்கப்படுகின்றன, குழந்தைகள் கல்வி கற்க முடியவில்லை, பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருந்தும் பிரதமர் மோடி அங்கு கால் வைக்கவில்லை.

அழைப்பு இல்லாமல் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்குச் செல்கிறார். ஒவ்வொரு தலைவரையும் கட்டிப்பிடிக்கிறார். ஆனால் மணிப்பூரைப் புறக்கணிக்கிறார். மோடிக்கு மணிப்பூருக்குச் செல்ல தைரியமும் இல்லை, விருப்பமும் இல்லை” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.