யுனெஸ்கோ அங்கீகாரம்: செஞ்சிக் கோட்டை வரலாறு என்ன? – ஒரு தெளிவுப் பார்வை

விழுப்புரம்: இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக செஞ்சிக் கோட்டை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 13-ம் நூற்றாண்டில் உருவான இந்தக் கோட்டையின் வரலாறு குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

விழுப்புரம் மாவட்ட வரலாற்று சுவடுகளில் முக்கியத்துவம் பெற்றது ‘செஞ்சிக் கோட்டை’. மூன்று குன்றுகளில் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டில் உருவான கோட்டை இது. தமிழக மன்னர்களின் பங்களிப்புடன், அவ்வபோது பொலிவு பெற்று வந்துள்ளது. கோயில்கள், அகழி, படைவீடுகள், வெடிமருந்து கிடங்கு, பீரங்கி மேடை என பல அம்சங்களை கொண்டது.

செஞ்சி கோட்டையின் வரலாறு குறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறும்போது, “கி.பி.13-ம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் பல ஆட்சியாளர்களால் மாற்றங்களை சந்தித்துள்ளது. தென்னிந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக் கோட்டை திகழ்ந்துள்ளது. பீஜப்பூர் சுல்தான்களிடம் இருந்து1677-ல் செஞ்சிக் கோட்டையை கைப்பற்றினார் மராத்தியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி. இவரது ஆளுகைக்கு உட்பட்டு 20 ஆண்டுகள் இருந்துள்ளது செஞ்சிக் கோட்டை.

இந்தக் காலகட்டத்தில், கிழக்கு இந்திய நிறுவனத்தினர், தேவனாம்பட்டினத்தில் வணிகம் செய்வதற்கான உரிமையை, செஞ்சி அரசாங்கம் வழங்கி இருக்கிறது. கைப்பற்றப்பட்ட செஞ்சிக் கோட்டையில் சில காலம் பேரரசர் சிவாஜி தங்கி உள்ளார். அப்போது கோட்டை அரண்களை பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார். சுற்றுச் சுவர் மதில்கள் பலப்படுத்தப்பட்டன. காவல் அரண்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவையற்ற கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இதனை பேரரசர் சிவாஜி கைப்பற்றிய சில நாட்களில், செஞ்சிக்கு வந்திருந்த பிரான்சிஸ் மார்ட்டின் பதிவு செய்து இருக்கிறார்.

இவரைத் தொடர்ந்து 1678-ல் செஞ்சிக்கு வந்திருந்த ஜெசூட் பாதிரியார் ஆன்ட்ரூ பிரைரா என்பவர், ‘இந்தப் பணியில், சிவாஜி தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி, முக்கிய நகரங்களைப் பலப்படுத்த தனது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தினார். செஞ்சியைச் சுற்றி புதிய அரண்களைக் கட்டினார், அகழிகளைத் தோண்டினார், கோபுரங்களை உயர்த்தினார் மற்றும் நீர்த்தேக்கங்களை அமைத்தார். மேலும், ஐரோப்பிய பொறியாளர்களே வியக்கும் வகையில் அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்’ என்று விரிவாகப் பதிவு செய்து இருக்கிறார்.‌

சத்ரபதி சிவாஜியின் இந்தப் பணிகள் மராத்திய அரசுக்கு பெரிதும் கைகொடுத்தன. இதனால், இவர்களிடமிருந்து செஞ்சியைக் கைப்பற்ற மொகலாயர்கள் 7 ஆண்டுகள் முற்றுகையில் ஈடுபட வேண்டியதாக இருந்துள்ளது. சிவாஜியின் ஆளுகையின் கீழ் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக செஞ்சிக் கோட்டை மாற்றப்பட்டது” என்றார்.

யுனெஸ்கோ அங்கீகாரம்: மேலும் அவர் கூறும்போது, “மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்காக அமைந்திருந்த 12 கோட்டைகளை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்தது. இதில் 11 கோட்டைகள் மராட்டியத்திலும், 12-வது கோட்டை தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, செஞ்சி கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கள ஆய்வு செய்தார். இவரது அறிக்கையைத் தொடர்ந்து செஞ்சிக் கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகளையும் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைத்துள்ளது யுனெஸ்கோ நிறுவனம். இதன் அறிவிப்பு நேற்று (ஜூலை 11) வெளியானது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடந்த உலகப் பாரம்பரிய குழுவின் 47-வது அமர்வில், இம்முடிவு எடுக்கப்பட்டது.

யுனெஸ்கோ அறிவிப்பின் பின்னணியில், 348 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச் சுவடு உள்ளது. உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை செஞ்சிக் கோட்டை பெரிதும் ஈர்க்கும்” என்றார் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.